தமிழ்நாட்டில் நாளை முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவற்றின் கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், இதனால் எந்தக் கட்சியில் என்ன மாற்றங்கள் நடைபெறும் என்று அரசியல் களம் பரபரத்துக் கிடக்கிறது.
மாநிலத்தின் ஆளும் கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 16) நடக்கிறது. இதில் 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி
- மாவட்டங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கம்
இதில் உதயநிதிக்குத் துணை முதல்வர் என்னும் கோரிக்கை, ’புலி வருது, புலி வருது’ என்னும் கதையாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அண்மையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்கும்போது, கோரிக்கை வலுத்திருக்கிறது; பழுக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். எனினும் முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், நாளை முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யோசனை
அதேபோல தமிழ்நாட்டில் திமுகவுக்கு அமைப்பு ரீதியாக, 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் கட்சியில் மூத்தவர்களுக்கு, 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை உள்ளன. இந்த எண்ணிக்கையைக் குறைத்து மாவட்டங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யோசனையை முன்வைத்துள்ளார்.
இதன்படி, 110-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை உருவாக்கி, புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கக் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்குத் தீவிரமாகத் தயாராகும் வகையில் திமுக களமாட உள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம்
அதேபோல பலகட்ட ஒத்திவைப்புக்குப் பிறகு, அதிமுகவின் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டமும் சென்னையில் நாளை (ஆக.16) நடக்க உள்ளது. இதில், கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
என்ன காரணம்?
அதிமுக கடந்த சில ஆண்டுகளாகவே தோல்விகளையே சந்தித்து வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் இடத்தைக் கூட அதிமுக பெற முடியாத நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 10 தோல்வி எடப்பாடி பழனிசாமி என்று விமர்சிக்கப்பட்டார். இதற்கு, கட்சி பிளவுபட்டதே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருந்தபோது அதிகார மையமாக வலம்வந்த சசிகலா, சசிகலாவின் அண்ணன் மகன் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இருந்தனர். இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் மூவருமே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அவர்கள் சார்ந்த சமுதாய வாக்குகள் பறிபோனதாகக் கூறப்படுகிறது.
கட்சிக்கு உள்ளேயே வலுக்கும் குரல்கள்
தொடர் தோல்விகளால் தொண்டர்களும் நிர்வாகிகளும் துவண்டு கிடக்கும் நிலையில், கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்று அக்கட்சிக்கு உள்ளேயே குரல்கள் வலுத்து வருகின்றன. அண்மையில் எடப்பாடியில் உள்ள ஈபிஎஸ் வீட்டிலேயே மூத்த அமைச்சர்கள் இதுகுறித்து விவாதித்ததாகவும் ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாகவும் தகவல் கசிந்தது. எனினும் கட்சியில் உள்ள பெரும்பாலான நபர்கள் ஒருங்கிணைப்பையே வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கட்சி நலன் மற்றும் தனது ஆளுமையை உறுதிசெய்ய, எடப்பாடி பழனிசாமி கட்சியில் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 3 பேரையும் இல்லாவிட்டாலும் ஒருவரையாவது இணைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஈபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார்.
எது எப்படியோ, நாளைய தினம் திமுகவிலும் அதிமுகவிலும் அடுத்தடுத்தும் நிகழும் மாற்றங்கள், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.