100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் ஜாமீன் மனுவை விசாரித்த கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 - நீதிபதி பரத்குமார்  ஜாமின் கொடுத்து உத்தரவிட்டார்.


 


கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி  ஆவணங்கள் மூலம் தனது ஆதரவாளர்கள் பெயரில்   பத்திரப்பதிவு செய்தாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில்  இருந்தார்.



  




நிலத்தை பறிகொடுத்த பிரகாஷ் என்பவர் வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்   எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கோரி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் எம் ஆர் விஜயபாஸ்கரின் வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பரத் குமார், எம் ஆர் விஜயபாஸ்கரின் ஜாமீன் மனுவை ஒத்திவைத்திருந்தார். 


இந்நிலையில் இன்று எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் “என்னை சிறைக்கு அனுப்ப ஒரு குழுவே வேலை செய்துள்ளது. என் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசியல் சார்ந்த வழக்குகள். இதை யார் செய்ய சொல்லியிருப்பார்கள் என அனைவருக்கும் தெரியும். 


எனக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைத்திருக்கிறது. இந்த வழக்குகளில் இருந்து சட்டப்படி வெளியே வருவேன். என்னை சிறையில் யாரும் துண்புறுத்தவில்லை. என்னை சார்ந்த அனைவரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 


எனக்கு உறுதுணையாக இருந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.