PM Modi Privilege Motion: பாஜக எம்பி அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை பிரதமர் மோடி பகிர்ந்த நிலையில், அதை எதிர்த்து மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸை காங்கிரஸ் தாக்கல் செய்துள்ளது.
பட்ஜெட் விவாதம்:
கடந்த 23 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பட்ஜெட் மீதான விவாதமானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் எம்பி சரண்ஜித் சிங் சன்னி இன்று மக்களவையில், உரிமை தீர்மான நோட்டீசை தாக்கல் செய்தார். பாஜக எம்பி அனுராக் தாக்குர் பேசிய வீடியோவை , பிரதமர் நரேந்திர மோடிக்கு X இல் ட்வீட் செய்தமைக்காக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதனால் உரிமை மீறல் நோட்டீஸ்:
மக்களவையில், நேற்றைய விவாதத்தின் போது, சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, பாஜக எம்.பி, அனுராக் தாக்கூர் பேசுகையில், தனது சாதியே தெரியாதவர், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி ஒருவர் பேசுகிறார் என ராகுல் காந்தியை மறைமுகமாக சாடினர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து, அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை, பிரதமர் மோடி ட்வீட் செய்து, கட்டாயமாக இதை கேளுங்கள் என்றும், காங்கிரசின் மோசமான அரசியல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீசை காங்கிரஸ் தாக்கல் செய்துள்ளது.
உரிமை மீறல் தீர்மானம் என்பது, நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு உறுப்பினருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானமாகும். அதாவது அவையின் விதிகளை அல்லது உரிமைகளை மீறி செயல்படும் பட்சத்தில் , இந்த தீர்மானமானது கொண்டுவரப்படுகிறது.
இந்த தீர்மானம் மக்களவையில் நிறைவேறினால், என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?
- அந்த நபருக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்படும்
- அல்லது இடைநீக்கம் செய்யப்படுவார்
- அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்.
பிரதமர் மோடிக்கு என்ன நடக்கும்?:
உரிமை மீறல் தீர்மானம் , மக்களவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றால், அதற்கு சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும். மக்களவையில், சபாநாயகர் அனுமதி கொடுப்பாரா என்றால் சந்தேகம்தான். அப்படியே கொடுத்தாலும், அவையில் தீர்மானம் நிறைவேற வேண்டும். மக்களவையில் பாஜகவினர் பெரும்பான்மையினவராக இருப்பதால், தீர்மானம் தோல்வியில்தான் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.