பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை நோக்கி சரமாரி கேள்விளை எழுப்பினார்.
பட்ஜெட் தயாரித்த குழுவில் எத்தனை பேர், தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்? பழங்குடிகள் எத்தனை பேர் உள்ளனர்? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? சிறுபான்மை சமூகத்தினர் எத்தனை பேர் உள்ளனர்? இதற்காகத்தான் சாதிவாரி கணக்கெடுப்பை கோருகிறோம்" என்றார்.
ராகுல் காந்தியின் சாதி குறித்து கேள்வி எழுப்பிய பாஜக எம்பி: இந்த நிலையில், இன்றைய விவாதத்தில் ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாகூர், "அவருடைய (ராகுல் காந்தி) சாதி என்ன என்பது யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்டவர், மக்களவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோருகிறார்" என்றார்.
இதனால் மக்களவையில் கடும் அமளி எழுந்தது. இதற்கு பதிலடி தந்த ராகுல் காந்தி, "தலித்துகளுக்காகப் போராடும் மக்கள் இப்படிப்பட்ட அவமானங்களைக் எதிர்கொள்வார்கள். நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னை அவமானப்படுத்துங்கள்.
நாடாளுமன்றத்தில் அமளி: சாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றி நான் பேசுவதால் அவர்கள் என்னை அவமதிக்கிறார்கள். ஆனால், அர்ஜுனனைப் போல அவர்கள் என்னை எவ்வளவு அவமானப்படுத்தினாலும், எனது இலக்கில் நான் கவனமாக உள்ளேன். ஆனால், மறந்துவிடாதீர்கள், நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்" என்றார்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், "அனுராக் தாக்கூர், நீங்கள் இப்போது அமைச்சராக இல்லாததால் வருத்தமடைந்துள்ளீர்கள். மேலும் உத்தர பிரதேசத்தில் பாஜக தோல்வியடைந்ததில் இருந்து, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக உறுப்பினர்களை யாரும் வாழ்த்துவது கூட இல்லை. அதுதான் இங்கு பிரச்னை" என்றார்.
தொடர்ந்து பேசிய அனுராக் தாகூர், "சாதி தெரியாதவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார் என்று கூறியிருந்தேன். நான் யாருடைய பெயரையும் சொல்லவில்லை" என்றார்.