கரூர் 80 அடி சாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் துணைச் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், மாவட்ட பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. கரூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை முதல் அதிமுக நிர்வாகிகள் வரிசையாக வரத் தொடங்கினர். இந்நிலையில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக மீண்டும் எம்.ஆர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார் என தகவல் வெளியானது.
கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவைச் செயலாளர் இளங்கோவன், மற்றும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. நல்ல நேரம் பார்த்து முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அவரை எதிர்த்து யாரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு போட்டியிடாததால் அவர் ஒரு மனதாக மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து மாவட்ட இணைச் செயலாளர்கள் பதவிக்கும், மாவட்ட துணை செயலாளர்கள் பதவிக்கு, மாவட்ட பொருளாளர் பதவிக்கு , அதேபோல் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கும் அதிமுக நிர்வாகிகள் தங்களது விருப்ப மனுவை வழங்கினர். இன்று நடைபெற்ற அதிமுக கழக அமைப்பு தேர்தலில் அதிமுக மாவட்டச் செயலாளருக்கு தலா 25 ஆயிரம் ரூபாவும், அதைத் தொடர்ந்து மற்ற அதிமுக நிர்வாகிகள் பதவிக்கு தலா 10,000- 5,000 ரூபாயும் அதிமுக தலைமை அறிவித்து. அதன்படியே கரூர் மாவட்ட அதிமுக கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை கட்டி ரசீது பெற்றுக் கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஒரு மனதாக வெற்றி பெற்றதை அடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, கிளை கழக நிர்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, சால்வை அணிவித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் காலத்தில் கரூர் மாவட்ட செயலாளராக முதல் முறையாக எம். ஆர். விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டது.
பின்னர் நீண்ட காலமாக அதிமுகவில் கழக அமைப்பு தேர்தல் நடைபெறாத நிலையில் தற்போது கழக அமைப்பு தேர்தலில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக மீண்டும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஒருமனதாக தேர்வாகி இருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நிலையில் மாவட்ட அவைத் தலைவர் பதவிக்கு, அதிமுக சீனியர் நிர்வாகிகள் ஆசைப்படுவதால். அதற்கு தற்போது போட்டா- போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது மீண்டும் அதிமுக மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்பு தேர்தலில் தேர்வாகியுள்ள எம்ஆர் விஜயபாஸ்கர் இருக்கு அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில், அவர் இன்னும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்து அதிமுக கட்சியை கரூர் மாவட்டத்தில் புத்துயிர் ஊட்ட வேண்டும் என சீனியர் அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.