கரூரில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ரகசிய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலர் சென்ற காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வாக்குவாதம், தள்ளுமுள்ளு, தகராறு ஏற்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை கைது செய்து வெங்கக்கல்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர்.




இதனை அறிந்த அதிமுகவினர் கரூர் - திண்டுக்கல் சாலையில் திருமண மண்டபம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார்  கலைந்து செல்ல அறிவுத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால் சாலையில் அமர்ந்து இருந்த 3 பெண்களை மட்டும் கைது செய்து  போலீசார் வாகனத்தில் ஏற்றி அழைத்த சென்றனர்.




இதனை தொடர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்தவர்களிடம் கைது ஆகிறவர்கள் மண்டபத்திற்குள் செல்லுமாறும், மற்றவர்கள் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். இதனை தொடர்ந்து மண்டப வளாகத்தில் இருந்த அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. தற்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.





அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், போலீசார் திமுகவின் ஏவள் துறையாக இருந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை வலுக்கட்டாயமாக கைது செய்து திருமண மண்டபத்தின் வெளிப் பகுதியில் தரையில் அமர வைத்துள்ளதாகவும், குடிக்க தண்ணீர் கூட தரவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாட உள்ளோம். எங்களை தாக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ஆய்வர்கள் மீது மனித உரிமைகள் ஆணையம் மீது புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். 




பின்னர் வெங்கக்கல்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முன்னாள் திமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்பட 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை மாவட்ட காவல்துறையினர் வருகை பதிவேட்டில் அடையாளங்கள் பெற்றுக்கொண்டு பின்னர் அனைவரையும் விடுதலை செய்தனர். இன்று நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பதவிக்கான தேர்வு முறையாக நடைபெறுமா, அல்லது நடைபெறாமலே போய்விடுமா, அல்லது பல நாட்கள் கால தாமதம் ஆகுமா  என்ற பல்வேறு கேள்விகளுடன் (அதிமுக, திமுக) இரண்டு தரப்பு ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் குழப்பத்தில் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்.


கரூர் அருகே காவல்துறையினரால் முன்னாள் அதிமுக அமைச்சர் கைது செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.