சமீபத்தில், மதிமுக தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி  நியமிக்கப்பட்டார். இதற்கு கட்சியின் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் ஆதரவும் தெரிவித்தார்கள்.


இந்த நிலையில், துரை வையாபுரியிடம் தந்தி டிவியில் சிறப்பு நேர்காணல் எடுத்தது. அதில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.


கேள்வி: யார் துரை வையாபுரி, பொதுமக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறார்?


பதில்: துரை வையாபுரி எனது குடும்பத்தார் வைத்த பெயர். கட்சியியினரால் அழைக்கப்படுவது துரை வைகோ. நான் பி.காம்., எம்பிஏ முடித்துவிட்டு ஒரு 6 வருடம் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன்பிறகு, 2000ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 17 வருடம் ஐடிசியில் டிஸ்டிரிபியூட்ராக தென்காசி மாவட்டத்தில்,  தமிழ்நாடு முழுவதும் கிடையாது. சில ஊடகங்கள் அதை தவறாக சித்தரிக்கிறார்கள். நான்கு வருடங்கள் முன்பே, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இடையில் நெறியாளர் கேள்வி: அதில் தான் சிகரெட் தொழில் என்று சர்ச்சையை உருவானதோ. பதில்: சரியாக சொன்னீர்கள். அப்பா பூரண மதுவிலக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும்போது, நான் புகையிலை விநியோகிக்ககூடிய சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் வந்தது. அப்பாவுக்கு அது நெருடலை ஏற்படுத்தியதால், அந்த பதவியில் இருந்து விலகிவிட்டேன். இப்போது நான் ஐடிசி பதவியில் கிடையாது.


கேள்வி: ஐடிசியில் இருந்து விலகிய பிறகு என்ன செய்தீர்கள்?


பதில்: சென்னையில் ஒரு ஹோட்டலை நடத்திக்கொண்டிருந்தேன். கொரோனாவால் அதை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடைய பசங்கள் இருவரும் கனடாவில் கல்லூரியில் படிக்கிறார்கள். வருடத்தில் மூன்று, நான்கு மாதங்கள் கனடாவில்தான் நான் இருப்பேன். தலைவர் வைகோவுக்கு மூன்று வருடங்கள் முன்பாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அப்போதில் இருந்து நான் இங்குதான் இருக்கிறேன். அவர் செல்லமுடியாத இடங்களுக்கு, அதாவது கட்சி சார்ந்த நல்லது, கெட்டதுக்கு நான் போய்க்கொண்டிருக்கிறேன். இதன்மூலம், கட்சி நிர்வாகிகளின் அறிமுகம் தமிழ்நாடு முழுவதும் கிடைத்தது.


கேள்வி: துரை வைகோனுடைய தொழில், பொது வாழ்க்கை அதைப்பற்றி எல்லாம் சொன்னீர்கள். ஆனா, வைகோ உடைய மகன் என்று சொல்லும்போது, சிறுவயது முதல் அரசியல் ஈடுபாடோ, அதைப்பற்றிய அறிவு கண்டிப்பாக இருந்திருக்கும். ஆனால், நீங்க அரசியலில் ஈடுபடுவது தொடங்கியது எப்போது?


பதில்: அரசியல் முற்றிலும் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம்தான். அரசியவாதிகள் மற்றும் அரசியல் அமைப்புகளை இத்தனை வருடங்கள் நான் விமர்சனம்தான் செய்துள்ளேன். அரசியல் நமக்கு தேவையில்லாத ஒரு இது. லீகல் புரெபெஷன் எடுத்திருந்தா இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று நானும், எனது அம்மாவும் பேசியுள்ளோம். கடந்த 2, 3 வருடங்களாக தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற இயக்க தோழர்களின் வீடுகளுக்கு, நிகழ்ச்சிகளுக்கு போகும்போது, அவர்களின் அன்பை பார்க்கும்போது, இவ்வளவு அப்பா மீது அன்பு கொண்டிருக்கிறார்கள் என்று எனது வாழ்க்கையில் முதல்முறையாக அறிந்துக்கொண்டேன். எனது குடும்பத்தில் எனது தாயார், மனைவி, மகள் ஆகியோர் அரசியலுக்கு வேண்டாம் வேண்டாம் என்று கூறினார்கள். அரசியலில் எனது அப்பா பட்ட கஷ்டங்களை பார்க்கும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்திற்காக எனக்கு பிடிக்காத நிலையில், காலத்தின் கட்டாயத்தில், நிர்பந்தமான சூழ்நிலையில் அரசியலுக்கு வந்துள்ளேன். 


கேள்வி: பிடிக்காத முடிவு, எனக்கே விருப்பமில்லை போன்ற வார்த்தைகளை அரசியல் தலைவரிடமிருந்து கேட்கமாட்டோம்.  அப்படி ஒரு மனநிலையில் இருக்கிறவர், திறம்பட தலைமையில் செயல்பட முடியும் என்று நினைக்கிறீர்களா?


பதில்: கண்டிப்பாக, இது எனக்காக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. கட்சி இயக்கத்தில் இருக்கிற தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் விருப்பத்திற்காக, நம்மை நாமே தயார்படுத்திக்க வேண்டும். நமக்கென்று இது எழுதப்பட்டிருக்கிறது. சரி, இதில் நாம் முடிவு எடுத்தாகிவிட்டது. இடையில் நெறியாளர் கேள்வி: நான் விரும்பவில்லை, எல்லோரும் விரும்பினார்கள் என்கிறீர்கள். ஆனால், ஒரு திணிக்கப்பட்ட தலைமை, திறன்பட்ட தலைமையாக இருக்க முடியுமா?. பதில்: எனக்காக எடுத்துக்கொண்ட முடிவு இல்லை. நம்மை நாமே தியாகம் செய்தாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பணிக்கான தகுதிகளை வளர்த்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.


கேள்வி: இந்தப் பொறுப்பிற்கு கட்சியில் உங்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது.


பதில்: தேர்தலில் கிட்டதட்ட 106 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 104 பேர் வரவேண்டும் என்றும், 2 பேர் வரவேண்டாம் என்று கூறியுள்ளார்கள். 6,7 பேர் வரவில்லை. ஒரு கட்சியில் நூற்றுக்கு நூறு ஒத்துக்கொள்ளவார்கள் என்றால், கண்டிப்பாக அதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், வாக்களிக்காதவர்களுக்கு என்னுடைய செயல்பாட்டின் மூலம், இந்த தம்பிக்கு வாக்களிக்கவில்லையே என்று கண்டிப்பாக நினைப்பார்கள்.


கேள்வி: ஆனால், அவைதலைவர், மாவட்ட செயலாளர்கள், இளைஞரனி பொறுப்பில் இருந்து முக்கியமானவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே?


பதில்: நான் 106 கூறும்போது எல்லோரும் முக்கியமானவர்கள்தான். என்னைப் பொறுத்தவரை 99 விழுக்காடு விருப்பம் தெரிவித்ததால்தான், இந்த முடிவை எடுத்தேன். அதேநேரத்தில், இந்தத் தேர்தலை வைக்க வேண்டுமென அவசியமே இல்லை. ஒரு நாமினேட்டட் பதவி. கட்சியினுடைய சட்டத்திட்டங்களின்படி, இவர் பொதுச்செயலாளராக அறிவிக்கலாம் என்று சட்டம் உள்ளது. இருப்பினும், நாளைக்கு ஊடகங்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஒரு அவதூறு வந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகதான் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு கொண்டு வந்து இருக்கிறார்கள். யார், யார் எதற்காக வாக்களிக்கிறார்கள் என்று தெரியவாய்ப்பில்லை. அனைவரின் முன்புதான், இந்தத் தேர்தல் நடைபெற்றது. மறைப்பதற்கு ஒன்றுமில்லை.


கேள்வி: தேர்தல் வைத்து, இத்தனை வாக்குகள் பெற்றிருக்கோம் என்ற விளக்கங்களை கொடுத்தாலும் கூட, வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களை தவிர்க்க முடியாது அல்லவா?


பதில்: அதை விமர்சனம் என்று நீங்கள் வைக்கிறீர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கினார்கள். அதில் குறிப்பாக சத்தூர் சட்டமன்ற தொகுதியில் நான் இருப்பேன் என்று மக்கள், கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தார்கள். நீங்கள் கூறுவதுபோல் வாரிசு அரசியல் என்று விமர்சனம் வைத்தால், அப்பவே நான் எம்எல்ஏ.,வாகி சட்டமன்றத்துக்கு சென்றிருப்பேன். அந்த சிறப்பான வாய்ப்பை நான் ஏன் தவிர்க்கனும். வாரிசு அரசியல் என்பது திணிக்கப்படுவது. தொண்டர்கள் விருப்பப்படாமல், திணிக்கப்படுவதே வாரிசு அரசியல். குடும்பத்தில் வேண்டாம் என்று கூறியும், தொண்டர்களுக்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.


கேள்வி: திமுக தொண்டர்கள் மேல் ஸ்டாலின் திணிக்கப்பட்டாரா? 


பதில்: இன்னொரு கட்சியின் கொள்கைகளை பற்றி நான் விவாதிக்க முடியாது.


கேள்வி: வாரிசு அரசியல் குறித்து ஏன் கேட்கிறேன் என்றால், மறுமலர்ச்சி திராவிட கழகம் உருவாவதற்கு முக்கிய மையப்புள்ளியாக இருந்தது அந்த இடம்தான். அதனால்தான் மதிமுகவில் அரசியல் வாரிசு விமர்சனம் அதிகமாக வருகிறதோ?


பதில்: எங்கள் கட்சியின் தொடர்பான கேள்விக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன். மற்ற கட்சியின் தொடர்பான கேள்விக்கு அந்தக் கட்சியிடம்தான் கேட்க வேண்டும்.


கேள்வி: 28 வருடங்களுக்கு முன்பு எது தவறு என்று கூறினோமோ?, அதைப்போல ஒரு விமர்சனம் நம் மீது வரும்போது, மதிமுக உருவான நோக்கமே அங்க இல்லாம போனதோ அல்லது சிதைஞ்சுபோனதோ?


பதில்: இது வாரிசு அரசியல் கிடையாது. வாரிசு அரசியல் கேல்விக்கான பதிலையும் தெளிவாக கூறிவிட்டேன். திமுகவை பற்றி அந்த கட்சியிடம்தான் கேட்க வேண்டும்.


கேள்வி: மதிமுகவை தனித்த இயக்கமாக வலுப்படுத்த என்ன திட்டங்கள் இருக்கிறது?


பதில்: என்னுடைய அரசியல் சித்தாந்தம் என்னவென்றால், வலதுசாரி அரசியலை முற்றிலும் எதிர்க்கிறவன். மதத்தால், இனத்தால் வாக்கு வங்கியை பெறுகிற அரசியல் அது. அதற்கு முற்றிலும் மாறுபட்டு மக்களுக்காக முன்னேற்ற அரசியல் கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு உண்டான தேவைகளை பூர்த்தி செய்து, மக்கள் மனதில் இடம்பெற்றாலே, தானாகவே இயக்கம் வளரும். அது என்னுடைய இலக்கு.


கேள்வி: அரசியல் விமர்சன பார்வையில், வைகோவை நிறைய தவறான முடிவுகளை எடுத்த சரியான மனிதர் சொல்வார்கள். மதிமுக வரலாற்றில் இந்த ஒரு முடிவு மாற்றலாம் என்று சொன்னால், எதை மாற்றுவீர்கள்? 


பதில்: இந்த பொறுப்பு கொடுப்பதற்கு முன்னால், இந்த கேள்வியை கேட்டிருந்தால் பதில் கூறியிருப்பேன். என்னுடைய வேலைகள் என்பது கூட எனக்கு தெரியாது. நான் சொல்லிவிட்டு, நாளை ஏன் சொன்னீர்கள் என்று கூட கேட்கலாம். தலைவர் வைகோவை பொறுத்தவரைக்கும் உணர்ச்சிவசம்படக்கூடிய மனிதர். அவர் சூசகமாக கூறியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில், சில தவறான முடிவுகளை எடுத்துள்ளேன் என்று. இந்த நேரத்தில் இதை குறிப்பிட்டு சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். 


கேள்வி: கட்சி பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு, அப்பாவின் முடிவுகள் குறித்து அவரிடம் விவாதம் செய்தது உண்டா?


பதில்: கண்டிப்பாக, விவாதம் செய்துள்ளேன். நான் கூறுவதை தலைவர் கேட்கமாட்டார். 109 விழுக்காடு தலைவர் கேட்கமாட்டார். மக்களாக எனது கருத்துகளை தெரிவித்து உள்ளேன். 


கேள்வி: எந்த வகைகளில் வைகோவிடம் துரை வைகோ மாறுபட்டவர்


பதில்: நான் அப்பாவை விட அதிகம் உணர்ச்சிவசப்படுவேன். நிர்வாகிகளிடம் இதைக்கூறிய அப்பா, நான் அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டேன் என்றெல்லாம் கூறியிருக்கிறார். நான் நடைமுறையாக சிந்திப்பேன். முடிவு எடுப்பதற்கு முன்பாக லாபம், நஷ்டம் என்பதை பார்ப்பேன். 


கேள்வி: துரை வைகோவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமா?


பதில்: அதிகம் என்று கூறமாட்டேன். கடவுள் நம்பிக்கை உண்டு. நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று. பெரியார் இல்லையென்றால் இன்றைக்கு சமூகபுரட்சி நடந்திருக்காது. சமூகநீதி இருக்காது.  பெரியார் இல்லை என்றால் நாம் நிறையபேர் இன்று கோயிலுக்குள்ளையே சென்றிருக்க முடியாது. பெரியாரும் வேண்டும், அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கையும் வேண்டும். அதற்காக என் கருத்துகளை பொறுத்தவரைக்கும், மூட நம்பிக்கைக்கு எதிரானதுதான் திராவிட இயக்கங்கள். கடவுளுக்கு, கோயிலுக்கு எதிரி கிடையாது. 


கேள்வி: பெரியார் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்பதால், மதிமுக புதிய பரிமாணத்தை எடுக்கிறதா?


பதில்: நான் வெளிப்படையாக சொல்லுகிறேன். கடவுள் நம்பிக்கை இன்று அதிகமாகக்கொண்டேதான் வருகிறது. எல்லா திராவிட கட்சியிலும் கடவுளை வழிபடுகிறார்கள். அதேநேரத்தில், திராவிட கொள்ளைகளை முழுமையாக ஆதரிக்கிறோம்.  அண்ணா கூறியிருக்கிறார், பிள்ளையாரை உடைக்க வேண்டாம் என்று, வாக்கு வங்கி அரசியலுக்காக என்பதை தாண்டி, எல்லோருடைய நிலைப்பாட்டை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் கூட.  எல்லோருடைய மதிக்க வேண்டும் என்று அண்ணாவின் இது, அதுவே என் கோட்பாடு ஆகும். 


கேள்வி: எல்லாத்தையும் ஒன்றாக பார்க்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கையும் உண்டு என்று சொல்கிறவர்கள். இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறமாட்டார்கள் என்று சர்ச்சை உள்ளது. மதிமுக  இனி இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுமா?


பதில்: என்னை பொறுத்தவரைக்கும் நான் கடவுள் பக்தி கொண்டவன். ஆனால், அதைப்பற்றி இயக்கத்தின் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். 


கேள்வி: அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற சொன்ன நீங்கள், ஏன் வாழ்த்து சொல்லக்கூடாது?


பதில்: இதுக்கு தலைவர் வைகோவிடம் தான் கேட்க வேண்டும். 


கேள்வி: ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் திமுக வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றி உள்ளார்களா?


பதில்: கண்டிப்பாக, நிறைவேற்றி உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியே அதற்கான சான்றிதழ் ஆகும். முதலமைச்சர் பொறுத்தவரைக்கும் நிறைய நல்ல திட்டங்களை அறிவித்திருக்கிறார். 10 வருடம் தேக்க நிலையில் இருந்த தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அருமையான திட்டங்களை அறிவித்திருக்கிறார். இந்தமாதிரி திட்டங்கள் அறிவிக்கும்போது, மக்களுக்கும், அரசுக்கு பாலமாக அமைய வேண்டும் என்று தான் எங்கள் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறேன். 


கேள்வி: ஆட்சி செய்ய தவறிய விஷயங்களை  சுட்டிக்காட்ட மதிமுக மறுக்கிறதோ?. ஆக்கப்பூர்வமான விமர்சனம் வைக்கவில்லையோ.


பதில்: ஆக்கப்பூர்வமான விமர்சனம் என்பதில் இருந்து முற்றிலும் நான் மாறுபடுகிறேன். இந்த ஆட்சி பதவியேற்கும்போது, கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. முதல் இரண்டு, மூன்று மாதங்கள் அதற்கே அவர்களுக்கு சரியாக போய்விட்டது. அப்படி இருந்தும் கூட, தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றிதான் இருக்கிறார்கள். அதேநேரத்தில், அரசு மீது சில குறைபாடுகள் இருந்தால், எங்கள் தலைவர் அதை செய்வார். அந்த நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது. தற்போது அதற்கான சூழ்நிலை இல்லை. 


கேள்வி: நீட், சட்டம் ஒழுங்கு, மதுவிலக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்கள் வைக்கிறார்கள்.


பதில்: பூரண மதுவிலக்கு கொள்கைகளில் மாறுபடவில்லை. ஆட்சி இப்போதுதான் அமைத்துள்ளார்கள். நான்கு, ஐந்து மாதங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. தொடக்கத்திலேயே நேர்மறையாக சொல்லக்கூடாது. ஆட்சி மீது, காலப்போக்கில் குறைகள் இருந்தால் வைகோ கண்டிப்பாக சுட்டிக்காட்டுவார்.


                                                                                      முழு வீடியோ 


 


 


 


நன்றி - தந்தி டிவி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண