கரூர்: அண்ணாமலையின் யாத்திரைக்குப் பிறகு செந்தில்பாலாஜி போல அடுத்தடுத்து, ஒவ்வொரு அமைச்சர்களாக சிறைக்கு செல்வார்கள் என்று பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் "மாற்றத்திற்கான மாநாடு" என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பந்தல் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மைதானத்தை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், ”திமுக ஆட்சியில் ஊழலுக்கு ஆணிவேராக இருக்கக்கூடியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. உச்சநீதிமன்றம் சொன்ன பின்பும், விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பிப்பதற்காக நடிப்பு, நாடகங்களை அரங்கேற்றி சட்டத்திற்கு புறம்பாக நடந்து வருகிறார். முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் பாஜக பொதுக்கூட்டம் "மாற்றத்திற்கான மாநாடு" என்ற தலைப்பில் நடைபெறுகிறது. அண்ணாமலை உரையாற்றிய பின், இது தமிழகமெங்கும் எதிரொலிக்கும்.
மேலும், அண்ணாமலை நடத்தும் யாத்திரையின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் செந்தில் பாலாஜியை போல, அடுத்தடுத்து சிறைக்கு செல்வார்கள். ஏனென்றால், அனைத்து துறைகளிலும் தவறுகள் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊழலைத் தவிர எதுவும் நடைபெறவில்லை என்று கூறும் அளவிற்கு உள்ளது.
செந்தில் பாலாஜி வழக்குக்கு எதிராக ஆதாரம், ஆதாரம் என்று கேட்கிறார்கள். யார் யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது என்று இந்த ஆதாரங்களை எல்லாம் வெளியிட்டதே முதல்வர்தான். தன்னுடைய குடும்பத்தை முதல்வர் காப்பாற்ற நினைக்கிறார்” என்று கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்