அதிமுக வரலாற்றின் ஒற்றை தலைமைக்கு அதிகார போட்டி நடைபெற்று வந்த நிலையில், அதிக பெரும்பான்மையுடன் தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போது எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, நேற்றைய செயற்குழு, பொதுக்குழு தீர்மானத்தில் ஏக மனதாக இடைக்கால பொதுச் செயலாளராக, அதிமுகவில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓபிஎஸ் தனது நிர்வாகிகள் உடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட அதிமுக நிர்வாகி இடையே சலசலப்பு, சண்டைக்கு காயமுற்றோரை முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளமான எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அதேபோல், ஓபிஎஸூம் தனது நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகே அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதே நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் புதிதாக பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் வெண்கல சிலையை திறந்து வைத்தார். அப்பொழுது, சிலை அருகே கல்வெட்டு பதிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது, அந்த கல்வெட்டில் சிலை திறப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி என்ற பெயரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரும், அதன் கீழே மத்திய நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு நகர செயலாளர் வி.சி.கே ஜெயராஜ் மற்றும் வடக்கு நகர செயலாளர் பாண்டியன் என்ற பெயரும் இடம்பெற்று இருந்தது.
பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக வடக்கு செயலாளராக இருந்த பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, அந்த கல்வெட்டில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சென்னையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் ஒற்றை தீர்மானத்தின் படி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தனர். அதன்படி, தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அவருடன் சில அதிமுக நிர்வாகிகளையும் நீக்குவதாக அறிவித்தார். அவர் அறிவிப்பிற்கு ஏற்றவாறு பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அதிமுக தலைமை மாவட்ட அலுவலகத்தில் இருந்த படங்கள் நீக்கப்பட்டது. இந்த நிலையில் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் வைத்து இருந்த சிலை திறப்பு விழா கல்வெட்டில் இருந்த ஓபிஎஸ் பெயர் மற்றும் பதவி கருப்பு ஸ்டிக்கரால் தற்போது மறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த கல்வெட்டில் வடக்கு நகர அதிமுக செயலாளர் பாண்டியன் என்ற பெயரை முழுமையாக நீக்கி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்