ABP's Southern Rising Summit: புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னையில் இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேது நடைபெற்றது. 


இந்தியாவின் தென் மாநிலங்கள் வளர்ச்சி, நிர்வாகம், கல்வியறிவு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடாகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலவும்,  விதிவிலக்கான முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும், ஏபிபி நெட்வொர்க் 'தி சதர்ன் ரைசிங் சம்மிட் 2023' என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.


அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ”மாநில அரசின் அதிகாரங்களை பறித்துக்கொள்ள பாஜக விரும்புகிறது. மத்தியில் அதிகாரத்தை குவிக்க விரும்புகிறது, பாஜக அனைத்திலும் ஒன்றை திணிக்க விரும்புகிறது. காங்கிரஸ் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை கொண்டு வர விரும்புகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை, ஒற்றுமை இவை அனைத்தும் பாஜக அழிக்க விரும்புகிறது. நீங்கள் சர்வதிகார ஆட்சியை செய்கிறீர்கள். எமர்ஜென்சி, 356 விதியை பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் பொதுமக்களிடம் சிறப்பான ஆட்சியை தருகிறேன் என்றுதானே வந்தீர்கள், ஆனால், தனிநபர் முதல் எதிர்க்கட்சிகள் வரை அனைவரும் திணறடிக்கிறீர்கள். சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறீர்கள். ஊடகவியலாயர்களே தங்களுக்காக நிற்க முடியாத சூழல் நிலவுகிறது. 


பாஜக ஆட்சியில் பொருளாதாரம் உயர்ந்தது என்று சொல்கிறார்கள், ஆனால், தனிநபர் வருமானம் குறித்த தரவரிசையில் உலகளவில் இந்தியா 124 இடத்தில் இருப்பது பற்றி ஏன் யாரும் பேசுவது இல்லை, இந்தியாவில் 200 இந்தியர்கள் குடியுரிமை விட்டுகொடுத்தது பற்றி ஏன் பேசவில்லை, அவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்கள். 


பணவீக்கத்தை பாருங்கள், கேஸ் சிலிண்டர் விலையை பாருங்கள். எங்களது காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது எப்படி இருந்தது..? இப்போது பாஜகவில் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சராசரியாக எத்தனை நபர்கள் தெருக்களில் துன்புறத்தப்படுகிறார்கள். சிறு முதலாளிகள் எத்தனை சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் தெரியுமா..? ஆனால், முதலாளித்துவம் சார்பு வணிகம் மிகப்பெரிய அளவில் இந்தியாவை சீரழித்துள்ளது. விமானநிலையம், மின் நிலையம், சுரங்கம் என அனைத்திலும் பெரும் முதலாளிகள்தான் பலன் பெறுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.