ABP's Southern Rising Summit: புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னையில் இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேது நடைபெற்று வருகிறது. 


இந்தியாவின் தென் மாநிலங்கள் வளர்ச்சி, நிர்வாகம், கல்வியறிவு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடாகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலவும்,  விதிவிலக்கான முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும், ஏபிபி நெட்வொர்க் 'தி சதர்ன் ரைசிங் சம்மிட் 2023' என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. 


 



இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை  பேசுகையில், “ 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமையும். இந்த வெற்றி தமிழ்நாடு அரசியலில் எதிரொலிக்கும். வரும்  நாடாளுமன்றத் தேர்தல் மோடியை மைய்யப்படுத்தியே இருக்கும்.  அது மோடிக்கு ஆதரவாக ஒரு தரப்பும், மோடிக்கு எதிராக ஒரு தரப்புமாக தேர்தலை எதிர்கொள்ளும். இதைவிடுத்து நடுநிலை என்ற ஒன்று 2024 தேர்தலில் இருக்காது. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இந்திய மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடிக்கும். 


நான் அரசியல் பின்னணி இருக்கும் குடும்பத்தில் இருந்து வரவில்லை. எங்கள் கட்சிக்கு பின்னணியில் உள்ளவர்கள் பொதுமக்கள்தான். இந்த கட்சியை உருவாக்கியது சாமானியர்கள், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். 


அண்ணாமலையின் பேச்சிற்கு மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியதாவது, ”I.N.D.I.A கூட்டணி மூன்று முறை சந்தித்து ஆலோசனை நடத்தியது. I.N.D.I.A கூட்டணி என்பது 5 மாநில தேர்தலை எதிர்கொள்வதற்கு இல்லை.  5 மாநிலத் தேர்தல் முடிவுகள் I.N.D.I.A கூட்டணிக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.  I.N.D.I.A கூட்டணி அமைக்கப்பட்டதற்கு நோக்கமே மத்தியில் கூட்டாட்சிக்கு எதிராகவும் பாசிச சிந்தனையுடனும் செயல்படும் பாஜகவை வீழ்த்துவதற்குத்தான்” என்றார்.