நெல்லை மாவட்டத்தில் பல்வேறு காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து  கொள்ள வருகை தந்த  சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு நெல்லை வண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் யோபு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


பா.ஜ.க. நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி:


அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தை பொறுத்தவரை 2019 தேர்தல் முடிவை விட 24 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சிறப்பானதாக இருக்கும். 38 பாராளுமன்ற தொகுதிகளில் 2019 ல் வென்றோம். அடுத்து வரும் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.  தமிழகத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி. மக்கள் அதனை  நிராகரிப்பார்கள். தமிழக மக்களின் மன ஓட்டம் மத்தியில் பாஜக ஆட்சி செய்ய கூடாது. அதற்கு மாறாக காங்கிரசை மையமாக வைத்து தான் ஆட்சி வர வேண்டும் என்பது தான்.


இந்த மன ஓட்டம் எல்லாம் சீமானுக்கு புரியாது. சீமான் கட்சியில் நிரந்தர உறுப்பினர்கள் இல்லை, ஒரு முறை கட்சியில் சார்பில் போட்டியிடுபவர்கள் கூட அடுத்த முறை கட்சியில் இருப்பதில்லை. அந்த நிலையில் தான் அவருடைய கட்சி இருக்கிறது. சிவகங்கை தொகுதியை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றி விடும் என அண்ணாமலை கூறியது குறித்து கேட்டதற்கு, கனவு காண்பது அனைவருக்கும் உரிமை. இது ஜனநாயக நாடு. கனவு காண்பவர்களை எல்லாம் நாங்கள் கைது செய்ய மாட்டோம் என்றார்.


பா.ஜ.க.விற்கு எதிரான கூட்டணி:


மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில், அடுத்து வரும் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார், தேசிய அளவிலான கூட்டணியை ஒரு தேசிய கட்சி தான் ஜெயிக்க முடியும். இந்தியாவை பொறுத்தவரை இரண்டு தேசிய கட்சிகள் தான் இருக்கிறது. எனவே எந்த ஒரு கூட்டணி அமைந்தாலும் பாஜக தனிப்பெரும்பான்மையில் இன்று ஆட்சி அமைகிறது. அவர்களுக்கு எதிராக ஒரு அணி அமைய வேண்டும் என்றால் அதற்கு மையமாக காங்கிரஸ் கட்சி தான் இருக்க வேண்டும். அதை பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டு உள்ளது.


குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக  தலைவர் ஸ்டாலின் தெளிவாக புரிந்து இருக்கிறார்.  மாநில அளவில் சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்  தேசிய அரசியல் என்று வரும் போது ஒரு பரந்த மனப்பான்மையோடு கூட்டணி வைக்க வேண்டும். சில மாநிலங்களில் அந்த கூட்டணி எளிதாக அமையும்.  சில மாநிலங்களில் அமைய வேண்டும் என்றால் முயற்சிகள் செய்ய வேண்டும், குறிப்பாக டெல்லியை எடுத்துக்கொண்டால் அங்கு ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்தால் ஏழு தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடையும். ஆனால் அங்கு மாநில அரசியலை பொறுத்தவரை ஆம் ஆத்மி, காங்கிரஸ் இரண்டிற்கும் போட்டி இருக்கிறது.  பிஜேபியை எதிர்த்து அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதில் தவறேதும் இல்லை. அது ஜனநாயகத்தின் ஆட்சியாக இருக்கும். 


தலைவராக எனக்கு விருப்பமே:


தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக வருவது என்பது குறித்து என்னை தனிப்பட்ட முறையில் கேட்டால், அந்த பொறுப்பை எனக்கு கொடுத்தால் எடுத்துக் கொள்வேனா எனக்கேட்டால் எனக்கு அதில் விருப்பமும் உள்ளது. நாட்டமும் இருக்கு, திறமையும் இருக்கிறது என நான் நம்புகிறேன். மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. அகில இந்திய தலைமை நம்பினால் எனக்கு அந்த வாய்ப்பு வரும் என நம்புகிறேன் என்றார்.


நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் இடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு தேர்வு நடத்துவது அவசியம் இல்லை. போட்டி தேர்வு வேண்டாமா? இல்லையா என்பது அடுத்த கேள்வி. அந்தத் தேர்வை மத்திய அரசு நடத்த வேண்டிய அவசியம் இல்லை, விஜய் எந்த சித்தாந்தத்தில் அரசியலுக்கு வருகிறார் என தெரியவில்லை. பணம் வாங்கி ஓட்டுப்போடாதீர்கள் என சொன்னார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நானும் அதை தான் சொல்கிறேன், எனவே இந்த விசயத்தில் என்னுடைய கருத்துக்கு ஒத்துப்போகிறார் என்று தான் சொன்னேன்.


விஜய் நிலைப்பாடு:


தமிழ்நாட்டிற்கு புது அரசியல் கட்சி தேவையா? இல்லையா என எனக்கு தெரியாது. வந்தால் எந்த இடத்தை நிரப்ப போகிறார் என்று தெரியவில்லை. அரசியல் என்பது ஒரு நாளில் அவர் முடிவு செய்ய முடியாது. அவரின் நிலை என்னவென்றும் எனக்கு தெரியாது. அதன் பின்னர் அவரின் அரசியல் ஒத்து போகிறதா என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். என்னை பொருத்தவரை ரசிகர் கூட்டத்தை வைத்து மட்டுமே ஒரு அரசியல் கட்சி நடத்த முடியாது. அதை ரஜினிகாந்த் தெளிவாக புரிந்து கொண்டார். கமலஹாசன் புரிந்து கொண்டு இருக்கிறார்.  எம்ஜிஆரே ரசிகர் மன்றத்தை வைத்து மட்டும் வெற்றி பெறவில்லை, திமுகவில் இருந்து ஒரு பெரிய கணிசமான  பகுதியை அதிமுகவாக மாற்றி தான் வெற்றி பெற்றார். 


காசுக்கு ஓட்டு என்பது கேன்சர். அது ஜனநாயகத்தையே சிதைக்கிறது.  இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலேயும் அதிகம் உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அமலாக்கத்துறை என்ற ஒரு இயக்கமே இந்தியாவில் இருக்கக் கூடாது. தேவையே இல்லை. அவர்கள் பணப்பரிமாற்றம் குறித்து மட்டுமே விசாரிக்க முடியும். அதற்காக சோதனையோ, கைதோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது தொலைக்காட்சிக்காக நடத்தப்படும் நாடகம் என்று தான் சொல்ல வேண்டும். இன்று அமலாக்கத்துறை ஒரு அடங்கா பிடாரியாக, கொள்ளிவாய் பிசாசாக, பூதமாக மாறி எந்த ஒரு வழக்கிலும் மூக்கை நுழைக்கலாம் என்ற அளவிற்கு வளர்ந்து விட்டார்கள்,  எனவே அமலாக்கத்துறையை மூட வேண்டும். நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று. பூரண மதுவிலக்கு அறிவித்துள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் உள்ளது. உலகம் முழுவதுமே பூரண  மதுவிலக்கு சாத்தியமற்றது. மதுவிலக்கு அறிவித்தால் கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கும் என்று தெரிவித்தார்.