கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


ஓரம்கட்டப்பட்ட எடியூரப்பா:


கர்நாடக மாநிலத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது எந்த கட்சிக்கும் அதிகப் பெரும்பான்மை கிடைக்காததால் கர்நாடகாவின் முதலமைச்சராக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். 6 நாள்களே பதவியில் இருந்த நிலையில் தேவே கவுடாவின் மகன் ஹெச்.டி.குமாரசாமி முதலமைச்சராக 2018ல் பதவியேற்றுக்கொண்டார். அவரது பதவி 2019ல் கவிழ, 2019ல் கர்நாடகாவின் முதலமைச்சராக எடியூரப்பா மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்று இரண்டு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்த இரண்டே நாளில் அவர் பதவி விலக பசவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின் தீவிர அரசியலில் இருந்து எடியூரப்பா விலகியே இருந்துவந்தார். பாஜகவில் இருந்து அவர் ஓரம்கட்டப்படுவதாக பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார்.


அரசியலில் இருந்து ஓய்வு:


இந்த நிலையில், ஷிகாரிபூர் தாலுகாவில் உள்ள அஞ்சனபுராவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடியூரப்பா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்றும், தனக்கு இத்தனை ஆண்டுகளாக அளித்துவந்த ஆதரவை தன் மகன் பிஒய் விஜயேந்திராவுக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.




காங்கிரசுக்குள் சண்டை:


மேலும், 2023 தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் முதலமைச்சர் கர்நாடகாவில் இருக்க மாட்டார். அதை நாங்கள் நடக்கவிடமாட்டோம். பாஜக வேட்பாளரே முதலமைச்சராக இருப்பார் என்று கூறினார். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் பொறுமையிழந்துவிட்டனர். தேர்தல் வருவதற்கு முன்பே யார் முதலமைச்சர் என்று பேச ஆரம்பித்துவிட்டனர். காங்கிரசுக்குள்ளேயே தலைவர்களுக்கிடையே யார் முதலமைச்சராக வேண்டும் என்ற சண்டை நடந்துகொண்டிருக்கிறது. இது எல்லாமே வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், பாஜகவே கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைக்கப்போகிறது என்று எடியூரப்பா பேசினார்.




”அமைச்சர் வெற்றிக்கு மகன் காரணம்:”


தனது மகன் விஜயேந்திரா பற்றி கூறும்போது, “தற்போது கர்நாடக மாநில விளையாட்டு மற்றும் இளைஞர்கள் சேவைத் துறை அமைச்சர் நாராயண கவுடாவின் வெற்றியை உறுதி செய்தவர் விஜயேந்திரா தான். மந்தியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தொகுதியில் நின்ற பாஜக வேட்பாளர் நாராயண கவுடாவை வெற்றிபெறவைத்தார் எனது மகன் விஜயேந்திரா” என்று பேசினார். மேலும், விஜயேந்திரா முன்பு முயற்சிகளை மேற்கொண்டார். நாராயண கவுடா தற்போது மூன்று அல்லது நான்கு தொகுதிகளில் வெற்றிபெறும் அளவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்.  கர்நாடகாவில் சில எம்எல்ஏக்களை வெற்றிபெற வைக்கும் அளவிற்கு தன் மகன் விஜயேந்திராவிற்கு திறமை இருப்பதாக” அவர் பேசினார்.


கர்நாடக அரசியலில் நீண்ட காலம் பாஜகவில் பயணித்த எடியூரப்பா அரசியலுக்கு முழுக்கு போட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.