கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


கர்நாடக தேர்தல்:


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில், பாஜக எவ்வளவு ஊழலில் ஈடுபட்டது என்பதை விளக்கும் வகையில் ஊழல் விலை பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ஆங்கில, கன்னட நாளிதழ்களில் விளம்பரமாக வெளியாகியுள்ளது இந்த ஊழல் விலை பட்டியல்.


40 சதவிகிதம் கமிஷன் கேட்பதாக கர்நாடக ஒப்பந்ததாரர்கள், பாஜக அரசு மீது சுமத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் பதவி 2,500 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதவி 500 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.


"கமிஷன் அரசு"


கடந்த 4 ஆண்டுகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை பாஜக அரசு கொள்ளை அடித்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. "அரசு பல விதமான டீலிங்கை மேற்கொண்டு வருகிறது. மடத்திற்கு மானியம் அளிப்பதற்கு 30 சதவிகித கமிஷனை கேட்கிறது. சாலை ஒப்பந்தங்களுக்கு 40 சதவிகித கமிஷனை கேட்கிறது. கொரோனா விநியோகத்திற்கு 75 சதவிகிதம் வரை கமிஷன் வாங்குகிறது.


மத்திய, மாநில பாஜக அரசு இரட்டை என்ஜின் அரசு அல்ல என்றும் சிக்கலான என்ஜின் அரசு என்றும் விமர்சித்துள்ளது. இதற்கு பதிலடி அளித்துள்ள பாஜகவின் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "போலி விளம்பரத்திற்காக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி அவதூறு வழக்கு தொடருவோம்" என்றார்.




தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகமாக நம்பியுள்ளது பாஜக. இதன் காரணமாக, தேர்தலுக்கு முன்னதாக 20க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி. இவர் மட்டும் இன்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை நட்சத்திர பிரச்சாரகர்களாக பாஜக களம் இறக்கியுள்ளது.


முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைமை கேட்டு கொண்டுள்ளது. அதேபோல, ஆட்சியை பிடிக்க ஊழல் விவகாரத்தையும் இடஒதுக்கீட்டையும் கையில் எடுத்துள்ளது காங்கிரஸ். வேட்பாளர் தேர்வில் இரண்டு கட்சிகளும் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.