கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களை வென்று ஆட்சியை இழந்துள்ளது. ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்காற்றும் என கருதப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வெறும் 19 இடங்களை கைப்பற்ற, சுயேச்சை உள்ளிட்ட பிறர் 4 இடங்களை கைப்பற்றினார்.


உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்த காங்கிரஸ்:


ஊழல், நிர்வாகம் உள்ளிட்ட மாநில பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், தேசிய விவகாரங்களை கையில் எடுத்திருந்தது பாஜக. விலையில்லா அரிசி, மின்சாரம், வருமான உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியிருந்த நிலையில், அது மக்கள் மத்தியில் எடுபட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.


குறிப்பாக, ஊரகப்பகுதிகளில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டு, பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ளது. ஆனால், நகர்ப்புறம் குறிப்பாக, மாநில தலைநகரான பெங்களூருவில் போட்டி கடுமையாகவே இருந்தது. கர்நாடகாவின் மிக பெரிய மாவட்டமான பெங்களூருவில் மொத்தம் 28 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.


இவை, பொதுவாக, பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. ஆனால், இந்த முறை இங்கு காங்கிரஸ் கடும் சவால் அளித்தது. இந்த போட்டி முடிவுகளிலும் எதிரொலித்தது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் 15 இடங்களை பாஜகவும் 13 இடங்களை காங்கிரஸ் கட்சியும் வென்றுள்ளது.


மிட்நைட் டிராமா:


பெங்களூரு நகர்ப்புறத்தில் உள்ள 7 தொகுதிகளில் பாஜக 5 இடங்களையும், காங்கிரஸ் 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. மகாதேவபுரா, யெலஹங்கா, தாசரஹள்ளி, யஷ்வந்தபுரா மற்றும் பெங்களூரு தெற்கு ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அதேசமயம் பைடராயனபுரா மற்றும் ஆனேகல் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.


இதில், ஜெயநகர் தொகுதியின் முடிவுகள் அறிவிப்பதில் தொடர் குழுப்பம் நீடித்து வந்தது. விடிய விடிய பரபரப்பு நிலவிய நிலையில், இறுதியில், வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் அந்த தொகுதியில் சி.கே. ராமமூர்த்தி போட்டியிட்டார், காங்கிரஸ் கட்சியின் சார்பாக சௌமியா ரெட்டி களம் கண்டார்.


விடிய விடிய பரபரப்பு:


வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால், வாக்குகளை மீண்டும் எண்ணும்படி ராமமூர்த்தி கோரிக்கை விடுத்தார். ஜெயநகரில் உள்ள ஆர்வி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் வளாகத்தில்தான் வாக்குகள் எண்ணப்பட்டது. 


காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், சௌமியா ரெட்டியின் தந்தை ராமலிங்க ரெட்டி மற்றும் பல தலைவர்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. ராமமூர்த்திக்கு ஆதரவாக அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.