செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் கல்பாக்கம் அணுமின் நிலையம், தடுப்பூசி தயரிக்கும் நிறுவனத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோயம்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ( coimbatore mp natarajan ) ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
அமைச்சரிடம் புகார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் பொதுவாக செயல்பாடுகள் உற்பத்தி அங்கு பணியாற்றுகின்ற பணியாளரின் நிலைமை குறித்து கலந்து பேசுவதற்காக, பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு ஏப்ரல் 28ஆம் தேதி கடிதம் எழுதி , மே மாதம் 12 ஆம் தேதி வருவதாக அறிவித்திருந்த போதிலும் சில அதிகாரிகள் டெல்லியில் இருந்து அழைப்பு வந்த காரணத்தினால், அங்கு செல்கிறோம் என்றும் வேறு அதிகாரிகள் உங்களோடு இருந்து அந்த பணியை பார்ப்பார்கள் என்று மெயில் மூலம் தகவல் அனுப்பி இருந்தார்கள். ஏப்ரல் 28ஆம் தேதி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் எழுதியிருந்த போதிலும், ஏப்ரல் 28ஆம் தேதி எழுதிய கடிதத்திற்கு மே மாதம் 11ஆம் தேதி பதில் அளித்திருப்பது ஏற்பதாக இல்லை என்பதை அவர்களிடம் தெரிவித்து இருப்பதோடு வருகின்ற திங்களன்று, இதுகுறித்து துறை சார்ந்த அமைச்சரிடம் புகார் மனு அளிக்க இருக்கின்றேன். என்பதை அவர்களிடம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறேன்.
கல்பாக்கம் அணு மின் நிலையம்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தை பொருத்தவரையில், நான்கு பகுதிகளாக அவை செயல்பட்டு வருகின்றது. இந்த நான்கு பகுதியிலேயும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், இந்த நான்கு பகுதியிலும் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு பகுதி சோடியத்தில் மின் உற்பத்தி செய்வது என்ற வகையில் துவங்கப்பட்டது. 22 ஆண்டுகள் ஆன பின்னரும் அந்தப் பணிகள் நிறைவு பெறவில்லை. மிகப்பெரிய திட்டம் என்ற முறையில் துவங்கப்பட்டு 22 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் ஆராய்ச்சி என்ற நிலையில் ,சென்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது தகுந்த ஆராய்ச்சியா தகுதியற்றதா என்று தெரியவில்லை. ஆகவே இப்ப பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும். இதற்கு என ஏராளமான பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வருகிற போது இருபத்திரண்டு ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட வற்றை மட்டும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்பது ஏற்புடையதாக இல்லை.இதில் அரசு தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம்
இதேபோன்று செங்கல்பட்டு அடுத்த மேலேறிப்பாக்கத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் 800 கோடி ரூபாய் செலவில் மக்கள் பணத்தில் அமைக்கப்பட்ட மத்திய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பயன்படுத்தியிருந்தால், இந்திய நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நாட்டிற்கும் கொரோனா தடுப்பூசியை ( Integrated Vaccines Complex ) வழங்கி இருக்க முடியும். மத்திய அரசை பொருத்தவரையில் தனியார் துறையை பலப்படுத்துவதற்காக மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இந்த பொதுத்துறை நிறுவனத்தை பலகீனப் படுத்தி வருகின்றனர்.
உடனடி நடவடிக்கை
அந்த வகையில் இந்த நிறுவனத்திற்கு எந்தவித உதவியும் செய்யாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் மாநில அரசு தற்போது இந்த நிறுவனத்திற்கு நாய் கடி தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகின்றது. இது மட்டும் போதாது. இந்த நிறுவனத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றால் ஆராய்ச்சியாளர்களை பணிக்கு எடுப்பதும், அதுக்கேற்ப தொழிலாளர்களை பணிக்கு எடுப்பதும். கூடுதலாக நிதி ஒதுக்க மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக செய்ய வேண்டும்.மாநில அரசை பொருத்தவரையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு வந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் மூலமாக முயற்சி செய்து நிறுவனத்தை மாநில அரசை எடுத்துக் கொள்கின்றோம் மத்திய அரசினால் நடத்த முடியவில்லை என்றால் இந்த தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை மாநில அரசு எடுத்துக் கொள்கின்றோம் என்று வலியுறுத்தியுள்னர். மத்திய இந்த நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால் மாநில அரசிடம் கொடுத்து விட வேண்டியது தானே. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து உரிய துறைகளுக்கு கடிதம் எழுத உள்ளேன்” என தெரிவித்தார்.