கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், 13ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. வடக்கு, மேற்கு, வடகிழக்கு என பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு, தென்னிந்தியா மட்டும் சவால் விடுத்து வருகிறது.


தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


தேர்தல் பிரச்சாரத்தில் குமுறிய பிரதமர் மோடி:


இதற்கிடையே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள், தன்னை 91 முறை அவமரியாதையாக பேசியதாக குற்றச்சாட்டு சுமத்தினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தன்னை விஷ பாம்புடன் ஒப்பிட்டு பேசியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மீது சரமாரி குற்றச்சாட்டு சுமத்தினார்.


இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "கர்நாடக தேர்தல் தன்னைப் பற்றியது அல்ல என்பதை நரேந்திர மோடி புரிந்து கொள்ள வேண்டும்" என விமர்சித்துள்ளார்.


தும்கூரு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, "இந்தத் தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல. இது கர்நாடக மக்கள் மற்றும் அதன் எதிர்காலத்தைப் பற்றியது. காங்கிரஸ் தலைவர்கள் உங்களை 91 முறை அவமரியாதையாக பேசியதாக நீங்கள் சொல்கிறீர்கள்.


ஆனால், நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி பேசவே இல்லை. உங்கள் அடுத்த உரையில், நீங்கள் என்ன செய்தீர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வீர்கள் என்பதைப் பற்றி பேச வேண்டும். நீங்கள் (மோடி) கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள். ஆனால், கர்நாடகத்தைப் பற்றி பேசுவதில்லை.


நீங்கள் உங்களைப் பற்றி பேசுகிறீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடகாவில் என்ன செய்தீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். இளைஞர்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழலுக்கு எதிராக என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றியும் உங்கள் உரைகளில் பேச வேண்டும்" என்றார்.


"தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல"


தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "கர்நாடகாவிற்கு வந்து காங்கிரஸ் கட்சித் தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார் போன்றோரைப் பற்றியும், அவர்களின் பணிகள் பற்றியும் பேசுகிறேன். எங்கள் எல்லாத் தலைவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசுகிறேன். நீங்கள் (மோடி) இங்கே வந்து உங்கள் முதல்வர் (பசவராஜ் பொம்மை) மற்றும் (பிஎஸ்) எடியூரப்பா (முன்னாள் முதல்வர்) பெயரை கூட உங்களின் உரைகளில் குறிப்பிடுவதில்லை.


மோடியை பற்றி மட்டுமே பேசுகிறீர்கள். பொம்மை, எடியூரப்பா ஆகியோரின் பெயரையும் ஓரிரு முறை குறிப்பிடுங்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்தத் தேர்தல் ஒருவரைப் பற்றியது அல்ல, நரேந்திர மோடியைப் பற்றியது அல்ல. இதை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.