சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து பணிமனையில் திமுக தொழிற்சங்கம் சார்பில் மே தினம் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக தொழிற்சங்க கொடியிலே ஏற்றி வைத்தார்.


முன்னர் தொழிலாளர்கள் இடையே உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”மே தினத்தை முன்னிட்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் 36 அமைப்புசாரா நல வாரியங்கள் அமைக்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சியில்தான்.


விவசாயக் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கியது, இந்தியாவிலேயே தமிழகத்தில் கை ரிக் ஷாவை ஒழித்து கட்டியது, சங்கம் இல்லாமல் செயல்பட்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களை வழங்கியது. தனியார் ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்கள் போல பணிக்கொடை வழங்கிய திட்டம், தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு, மே தின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1990 ஆம் ஆண்டு சென்னை நேப்பியர் பூங்காவிற்கு மே தின பூங்கா என்று பெயர் சூட்டி அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தவர் கருணாநிதி. இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் மே தின பூங்கா அமைத்து இருப்பது திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியான என் தொகுதியில் தான்” என்றார்.



”ஆண்டுதோறும் மே தின விழாவில் தலைவருடன் சென்று பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன். இந்த ஆண்டு சேலத்தில் உள்ள தொழிலாளர் உடன் மே தின விழா கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரியார், அண்ணாவை சந்திக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்ட் ஆக மாறி இருப்பேன் என முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சொல்லுவார்கள் அவர்களின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அங்கு சென்று மே தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். தமிழக முதல்வர் தொழிலாளர் மீது அதிக அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கடந்த ஓராண்டில் 18 அமைப்புசாரா வாரியங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 60 பேருக்கு 660 தொழிலாளர்களுக்கு 247 கோடி அளவு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார்.



அண்மையில் ஒரு சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது. அது குறிப்பிட்ட சில நிபந்தனையுடன் கூடிய தொழிற்சாலைக்கு மட்டும்தான் பொருந்தும் என்று கூறப்பட்டிருந்தது இருந்தாலும், அதனை பல்வேறு கோணத்தில் பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர். அதற்கெல்லாம் மதிப்பு கொடுக்கக்கூடிய வகையில் தொழிற்சங்கங்கள் அதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் தொழிலாளர்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வண்ணம் அந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தலைவர் அறிவித்திருந்தார். இன்று மே தினத்தன்று இன்று காலை தலைவர் அவர்கள் அறிவித்திருக்கிறார். அந்த சட்டத்தை உடனே திரும்ப பெறுகிறோம் என்று அறிவித்திருக்கிறார் என்றைக்குமே தொழிலாளர் நலனை பேணிக்காக்கும் இயக்கமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் முந்தைய ஆட்சியாளர்கள் டெஸ்மா எஸ்மா என்ற சட்டங்களை கொண்டுவந்து தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் தொழிலாளர்களுக்கும் திமுக விற்கும் இடையேயான உறவு என்பதை யாராலும் அளித்திட முடியாத உறவாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது பல்வேறு அணியினர் வரவேற்பு அளித்தனர் இருந்தாலும் தொமுச அணியினர் முந்திக்கொண்டு வரவேற்பளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.