நீறுபூத்த நெருப்பாக புகைந்துக் கொண்டிருந்த கர்நாடக காங்கிரஸின் கோஷ்டிப்பூசல் தற்போது வெடித்துச் சிதற ஆரம்பித்திருக்கிறது. சிவகுமாருக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என அவரது ஆதரவாளர்களும், மேலும் 3 துணை முதலமைச்சர் பதவிகளை உருவாக்க வேண்டும் என சித்தராமையாவின் ஆதரவாளர்களும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர். இதனால், கர்நாடக காங்கிரஸின் உட்கட்சிப்பூசல் எந்த நேரமும் பெரிதாக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் அசத்திய காங்கிரஸ்:
கர்நாடகாவில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, யாருமே எதிர்பாராத வகையில், காங்கிரஸ் கட்சி அபாரமாக வெற்றிப்பெற்று, ஆட்சியைப் பிடித்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 134 இடங்களில் காங்கிரஸ் மட்டுமே வெற்றிபெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து, பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவைத் தந்தது.
காங்கிரஸின் இந்த அபார வெற்றிக்கு, கட்சித் தலைவர் டி.கே.சிவகுமாரின் பெரும்பணிதான் காரணம் என அனைவரும் பாராட்டினர். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், சித்தராமையாவை முதல்வராகவும் டி.கே. சிவகுமாரை துணை முதல்வராகவும் தேர்வு செய்தது காங்கிரஸ் மேலிடம். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, தங்களுக்கு முதல்வர் பதவி தரப்படும் என வாய்மொழியாக, டி.கே.சிவகுமாருக்கு கூறப்பட்டதாக, காங்கிரஸ் தரப்பில் பேசப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் சொதப்பிய காங்கிரஸ்:
சட்டமன்றம் போலவே, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபாரமாக வெற்றிப் பெறும் என அக் கட்சியினர் கூறி வந்த நிலையில், வெறும் 9 இடங்களில் மட்டுமே அக் கட்சியால் வெல்ல முடிந்தது. அது மட்டுமில்லாமல், துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி டி.கே. சுரேஷ் பெங்களூரில் தோல்வி அடைந்தார். இந்தத் தோல்விக்கு, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலே காரணம் என கூறப்பட்டது. குறிப்பாக, முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களின் சதியே காரணம் என டிகேஎஸ் தரப்பினர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினர். அதுமட்டுமில்லாமல், சென்னபட்னா சட்டமன்ற இடைத்தேர்தலில், தமது சகோதரர் சுரேஷை களமிறக்க, துணை முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதற்கு முதல்வர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகத் தெரிகிறது.
டெல்லியில் புகார்பட்டியல் வாசித்த துணைமுதல்வர்:
முதல்வர் சித்தராமையாவின் ஒத்துழையாமை மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயல்களால், காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைவதாக, துணை முதலமைச்சர் சிவகுமார் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டும் இல்லாமல், காங்கிரஸ் கட்சித்தலைவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவருமாக மல்லிகார்ஜூன கார்கேவிடம் பெரும் புகார்ப்பட்டியலைத் தந்துள்ளாராம் துணைமுதல்வர் சிவகுமார். அது மட்டும் இல்லாமல், பெரும்பான்மையான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தம் பக்கம் உள்ளதாகவும், தம்மை முதல்வராக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதையும் காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் டிகேஎஸ். இதற்கிடையே, 24 எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆதரவாகவும் வெளிப்படையாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது அரசியல் ரிதீயாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதிலடி கொடுக்கும் முதல்வர் சித்தராமையா:
துணை முதலமைச்சர் சிவகுமாருக்கு ஏகப்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அவரது வேலைப்பளு அதிகமாகிவிட்டதால், கட்சிப் பணிகளில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால்தான் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில், அதிக இடங்களில் வெற்றிப் பெறமுடியாமல் தோல்வி அடைந்தது என சித்தராமையாவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல், முதல்வரின் ஆதரவாளர்களான அமைச்சர்கள் கே.என். ராமண்ணா, சதீஷ் ஜார்கிஹோளி, சமீர் அகமது கான் ஆகியோர், தங்களது பிரிவினருக்கு முக்கியத்துவம் தருவதுடன் அவர்களுக்கான நலப்பணிகளைக் கொண்டுச் செல்லும் வகையில், 3 துணை முதலமைச்சர் பதவிகளை புதிதாக நியமனம் வேண்டும் என வெளிப்படையாகவே கோரிக்கை வைத்துள்ளனர். இது, சிவகுமார் ஆதரவாளர்களின் முதலமைச்சர் பதவி கோரிக்கைக்கு, நேரடி பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. விரைவில், டெல்லி செல்லவும், முதலமைச்சர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உட்கட்சிப்பூசலால் ஆட்சி கவிழுமா?
பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால், உடனடியாக ஆட்சி கவிழும் வாய்ப்பு இல்லை என்பதுதான் கர்நாடக அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், தற்போது வெளிப்படையாகவே, சிவகுமாரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 24 பேர், முதல்வரை எதிர்க்கின்றனர். இது தொடர்கதையானால், இந்தச் வாய்ப்பை பாஜக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் உடையும் அளவுக்கு, டி.கே. சிவகுமார் கொண்டு செல்லமாட்டார் எனவும், 134 எம்எல்ஏ-க்களில், 100-க்கும் மேற்பட்டோர் சிவகுமாரின் ஆதரவாளர்கள்தான் என்பது அனைவரும் அறிந்தது.
தான் கட்டியமைத்த ராஜ்ஜியத்தை தானே அழிக்க டிகேஎஸ் உடன்படமாட்டார் என்பது அரசியல் பார்வையாளர்களின் எண்ணம். எனவே, காங்கிரஸ் டெல்லி தலைமையின் ஆசியுடன் விரைவில், தாம் முதலமைச்சராக மாறுவதற்கான ஏற்பாடுகளை அவர் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கிறது. இதை எப்படி சமாளிக்கப்போகிறார் மூத்த அரசியல்வாதியும் முதலமைச்சராகவும் இருக்கும் சித்தராமையா? என்பதுதான் கர்நாடக அரசியலின் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி.