Karnataka Election : கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 3 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக அரசியல் சூழல்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10 தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது
தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. கர்நாடகாவை பொறுத்தவரையில் மூன்று முக்கிய கட்சிகள் உள்ளன. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பழைய மைசூரு பகுதியில் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம். பொதுவாக, இந்த மூன்று அரசியல் கட்சிகளை சுற்றிதான் அரசியல் நகர்வு மேற்கொள்ளப்படும்.
ஆனால், அதையும் தாண்டி தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சியும் கர்நாடக தேர்தலில் பொதுவாக அதிக கவனம் செலுத்துவது வழக்கம். தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் என்பதால் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதன் காரணமாகவே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிமுக பல ஆண்டுகளாக போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறை கர்நாடக தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது அதிமுக.
வேட்பாளர்கள்
அதன்படி, பெங்களூரு புலிகேசி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அன்பரசன் போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ள நிலையில் அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து, அன்பரசன் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தமிழகர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, புலிசேகி நகர் தொகுதியின் வேட்பாளராக நெடுஞ்செழியன், காந்தி நகர் தொகுதியில் கே.குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்களை நேற்று தாக்கல் செய்தனர்.
ஓபிஎஸ் மனு நிராகரிப்பு
நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் 3 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோலார் தங்கவயலில் அனந்தராஜ், காந்தி நகரில் கே.குமார், புலிகேசி நகரில் நெடுஞ்செழியன் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பு மனுக்களில் முழுமையான தகவல்கள் இல்லாததால் தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளதாக தெரிகிறது. அதேபோல, கர்நாடக புலிகேசி நகரில் போட்டிட வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் அன்பரசனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அன்பரசன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.