தூத்துக்குடியில் நடந்த பேருந்து நிலையம் திறப்பு விழாவில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, தூத்துக்குடி விமான நிலையம், ரெயில்நிலையம், துறைமுகம், சாலை வசதி என்று அனைத்து போக்குவரத்து வசதிகளையும் கொண்ட மாவட்டம் ஆகும். அதே போன்று உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, தன் முனைப்போடு தொழில் தொடங்கி முதன்மையாக வர வேண்டும் என்று நினைக்கக்கூடிய மக்கள் வாழக்கூடிய மாவட்டம் தூத்துக்குடி.
பிரச்சினைக்காக காத்திருக்கிறார்கள்:
அதனால்தான் தூத்துக்குடியில் அறைகலன் பூங்கா கொண்டு வரப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை குடிநீர் பிரச்சினை. இந்த மாவட்டம் முழுவதும் தண்ணீர் பிரச்சினையே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் உறுதி அளித்து உள்ளார்.
தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையம் கட்டிட பணிகளை விரைந்து, சிறப்பாக முடிக்க வேண்டும் என்று பலமுறை ஆய்வு செய்து உள்ளோம். ஒரு ஊரில் பஸ் நிலையம் என்பது அந்த ஊரின் அடையாளம். மக்களின் வாழ்க்கையோடு இணைந்து இருக்கும். இதிலும் அரசியல் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். எதிலும் தேவையற்ற விஷயங்களை புகுத்தி நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய சிலர் இருக்கிறார்கள். எந்த இடத்தில் பிரச்சினையை கிளப்பலாம் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இங்கேயும் சில பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
குளத்தில் கூட தாமரை மலராது:
எந்த திட்டமும் மத்திய அரசுக்கு மட்டும் சொந்தம் கிடையாது. எல்லா திட்டத்திலும் மாநில அரசின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. அதனை யாரும் மறுக்க முடியாது. இதில் எங்கள் உழைப்பு உள்ளது. நீங்கள் கொடுக்கும் பணமும் நாங்கள் கொடுக்கும் ஜி.எஸ்.டி வரிப்பணம்தான். அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு பெயர் வைத்துக் கொள்கிறது. ஊடகங்கள் வழியாக அரசு நடத்திக் கொண்டு இருக்கும் அரசுக்கு பெயர் வைத்துக்கொள்வது, பெயரை மாற்றி அரசியல் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள். நிச்சயமாக எந்த மாற்றமும் இங்கு வராது. இங்கு உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது. விழிப்போடு இருங்கள். தமிழகத்தை காப்பாற்றுங்கள். நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து அரணாக நின்று தமிழகத்தை தமிழ் உணர்வோடு காப்போம் என்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:
விழாவில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எப்போதும் தூத்துக்குடி மக்களோடு ஒருவராக தன்னை மாற்றிக் கொண்டு, மககள் குறைகளை நிறைவேற்றி தருகிறார். எப்போதும் தொகுதி மக்களை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி தொகுதிக்கு நிதி தாராளமாக வழங்கப்படும். தென் தமிழகத்தில் தொழில்வளர்ச்சி கேந்திரமாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் இருக்கும். இதனால் டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது. பர்னிச்சர் பார்க்கில் தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. விரைவில் தொழில்கள் தொடங்கப்படும். அதே போன்று கிரீன் அம்மோனியா தயாரிப்பு நிறுவனங்களும் வர உள்ளன. நிச்சயமாக இந்த பகுதி தொழில் வளர்ச்சிக்கு துணை நிற்போம் என்றார்.
விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையம் நல்ல முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் ஏதாவது குறைகூறிக் கொண்டுதான் இருப்பார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தூத்துக்குடிக்கு ரூ.200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. சாலைகள் குறுகலாக அமைக்கப்பட்டு வந்தன. அதனை மாற்றி சாலைகளை விரிவுபடுத்தி உள்ளோம். அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று கூடுதல் நிதி பெற்று பணிகளை நிறைவேற்றி உள்ளோம். இதே போன்று அறிவியல் தொழில்நுட்ப பூங்கா 27 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்து உள்ளது. இதற்கு முழுமையாக இடம் தேர்வு செய்து, நாம் தான் கட்டி முடித்து உள்ளோம். இந்த திட்டங்களை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று யாரும் உரிமை கோரமுடியாது. மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் பெரிய சவாலாக இருக்கிறது. ஆகையால் 4-ம் கேட்டில் ஒரு ரெயில்வே மேம்பாலமும், கருத்தப்பாலம் பகுதியில் ஒரு பாலமும் அமைக்க வேண்டும் என்றார்.