சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெற உள்ளது. இதற்காக, கடந்த சில தினங்களாக அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி.யுமான கனிமொழி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். மூன்று தினங்களுக்கு முன்பு தேனியில் கனிமொழி பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், சில தினங்களாக கனிமொழிக்கு தொண்டை கோளாறு, சளித்தொல்லை இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையின் முடிவு இன்று காலை 11 மணிக்கு வந்தது.
அதில், கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும், தன்னுடன் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கனிமொழி இன்று மதியளவில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார்.