தமிழகம், கேரளம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 3 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக வரும் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வாகார்க் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறும்போது,
“ புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6-ந் தேதியில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமைதி மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களைத் தடுக்கும் நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்காரணமாக, சட்டவிரோதமாக அரசியல் கட்சிகள் ஒன்று கூடுதல், ஆயுதங்கள், கம்புகள், பேனர்கள், போஸ்டர்கள், பதாகைகள் வைத்திருத்தல், கோஷம் எழுப்புதல், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துதல், அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த 48 மணிநேரத்தில் வீடு வீடாக பிரசாரம் செய்வதை தடை செய்யவோ அல்லது பொது ஊரடங்கு உத்தரவு, மத விழாக்கள், திருமணங்கள், இறுதி சடங்குகள் அல்லது வாக்குப்பதிவு தொடர்பான பிற நடவடிக்கைகளுக்கு பொருந்தாது. மக்கள் அதிகளவில் தங்களது வாக்குகளை செலுத்த வர வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார். தற்போது வரை புதுச்சேரியில் ரூ.42 கோடியே 12 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பணம், நகை, பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.