ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி, ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் திமுக சேர்மன் எஸ்.டி. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தை சேர்ந்த 16 கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வேளாண்மை துறை, வருவாய்த்துறை, போன்ற துறைகளை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.



 

விசிக கவுன்சிலர் தியாகராஜன்

 

அப்போது அந்தந்த வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள பாதிப்புகளை அதிகாரிகளிடம் கோரிக்கையாக முன் வைத்தனர். பின்னர் கூட்டத்தில் பேசிய 2 - வது வார்டு விசிக கவுன்சிலர் தியாகராஜன் எனது வார்டில்,  ஒன்றரை வருடங்களாக வளர்ச்சி பணிகளுக்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை,  இதன் காரணமாக சாலை, குடிநீர், தெரு விளக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, போன்ற அடிப்படை வசதிகள் கூட பொதுமக்களுக்கு செயல்படுத்த இயலவில்லை என்றும், இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சரமாரியாக திமுக சேர்மன், பிடிஓ பாலாஜி, ஆகியோரிடம் முறையிட்டு கேள்வி எழுப்பி புகார் தெரிவித்தார்.



 

"நோட்டீஸ் அடித்து மக்களுக்கு விநியோகம் "

 

மேலும் தன்னை நம்பி வாக்களித்த பொதுமக்களுக்கு எந்த ஒரு நல பணியும் தன்னால் செயல்படுத்த இயலவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் தான் வார்டு கவுன்சிலராக இருப்பதற்கு, தகுதி இல்லை என நோட்டீஸ் அடித்து, மக்களுக்கு விநியோகம் செய்ய இருப்பதாக கூறியதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.



 

மாற்றி ஓட்டு போட்டு இருந்தால் கூட..

 

இறுதியாக பேசிய விசிக கவுன்சிலர், "உங்களுக்கு ஓட்டு போட்டு சேர்மனாக ஆகிய என்னை கேவலமாக பார்க்கிறீர்கள். நான் சும்மா இங்கே வரவில்லை, அடுத்து நடக்க இருக்கின்ற மீட்டிங்களுக்கும் நான் வரப்போவதில்லை. நான் உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு அசிங்கப்படுகிறேன். மாற்றி ஓட்டு போட்டு இருந்தால் கூட மக்களுக்கு ஏதாவது செய்திருப்பார்கள் என சூட்சகமாக, படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளுக்கு வாக்களித்திருக்கலாம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது ( சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட  கருணாநிதி மற்றும் எல்லம்மாள் ஆகிய இருவரும் சம வாக்குகளை பெற்றார்கள், குலுக்கல் முறையில் கருணாநிதி சேர்மேனாக பதவி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது ) . தியாகராஜன் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருந்த பொழுது, பேரூராட்சி சேர்மன் கருணாநிதி கண்டு கொள்ளாமல் கடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது