எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதன் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட ஒரு பெரிய பிராந்திய அதிகார கூட்டமைப்பாகும். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 42 சதவீதத்தையும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு:
கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் 9ஆம் தேதி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது இந்தியா. இச்சூழலில், கோவாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சமூகமான உறவு இல்லாத சூழலில், கோவாவில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பாகிஸ்தகான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த கூட்டத்தில், இன்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கடுமையாக சாடினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நோக்கமே பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதுதான் என கூறிய மத்திய அமைச்சர், "பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும். வேறுபாடு இல்லாமல் தடுக்க வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக கொந்தளித்த ஜெய்சங்கர்:
கோவிட் மற்றும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் தடையின்றி தொடர்கிறது. இந்த அச்சுறுத்தலில் இருந்து நம் கண்களை விலக்குவது நமது பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். பயங்கரவாதத்திற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் அது நிறுத்தப்பட வேண்டும். உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்துள்ளதால், ஆற்றல், உணவு மற்றும் உரங்கள் ஆகியவற்றின் விநியோகத்தில் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. உலகம் பல சவால்களை எதிர்கொள்கிறது. இது வளரும் நாடுகளின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது" என்றார்.
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "எங்கள் முயற்சிகள் ஆப்கானிஸ்தான் மக்களின் நலனை நோக்கியதாக இருக்கிறது. மனிதாபிமான உதவிகளை வழங்குதல், உண்மையிலேயே உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை உறுதி செய்தல், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவை எங்களின் உடனடி முன்னுரிமைகளில் அடங்கும்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான பலதரப்பு அணுகுமுறைகளுக்காக இந்தியா எப்போதும் துணை நிற்கிறது. எங்கள் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் விருப்பமான நட்பு நாடாக இருந்து வருகிறது" என்றார்.