திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை சாதி மதம் என பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் என்பது புரியாது, தமிழ்நாடு மக்களுக்கு திராவிட மாடல் என்பது நன்றாகவே புரியும் என கூறினார். 


மேலும் அவர் பேசுகையில், ”இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு தமிழ்நாட்டினை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முதலமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். எனக்கு இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட எனது மனதிற்கு தெம்பும், தைரியமும் கொடுத்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் தான். தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்காக பணியாற்றவேண்டியது எனது கடமை. நான் என்னால் முடிந்த அளவிற்கு செயல்படுகிறேன். எனது சக்திக்கு மீறியும் செயல்படுகிறேன். அந்த உழைப்பின் பயனை தமிழ்நாட்டு மக்களின் முகத்தில் பார்க்கிறேன். மேலும், நீங்கள் எனக்கு கொடுத்த பொறுப்பில் நான் சரியாக பணியாற்றுகிறேன் என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது” என்றார். 


மேலும், “ திராவிட மாடல் என்றால் என்ன என கேள்வி கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் மகிழ்ச்சியும் புன்னகையுமே பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறது. பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என திருக்குறள் கூறுகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்பது திரவிட மாடல். மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் என்பது புரியாது. தமிழ்நாட்டிற்கு விடியலை ஏற்படுத்த திமுகவிற்கு வாக்களித்த அறிவார்ந்த தமிழ்நாட்டு  மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்னவென்பது தெரியும்” இவ்வாறு அவர் பேசினார்.  


அதேபோல் “ மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருப்பவர்களைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. நம் கடமையைச் செய்தால் போதும் என்ற உணர்வில் நான் செயல் படுகிறேன். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்பது கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஏழை மக்களின் நலன் காக்கும் குடியிருப்பாக உள்ளது. தலைமைச் செயலகம் என்பது தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றும் முதன்மைச் செயலகமாக மாறியுள்ளது. இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகார முகமல்ல அன்பு, இந்த ஆட்சியின் முகம் என்பது ஆணவமல்ல ஜனநாயகம். இந்த ஆட்சியின் முகம் அலங்காரமல்ல எளிமை. இந்த ஆட்சியின் முகமென்பது சர்வாதிகராமல்ல ஜனநாயகம், இந்த ஆட்சியின் முகமென்பது சனாதனமல்ல சமூக நீதி. இதனால் தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது பலரால் விரும்பப்படுகிறது.  இவ்வாறு முதலமைச்சர் அந்த நிகழ்வில் பேசினார். அதில் அவர் திராவிட மாடல் குறித்து பேசியது ஆளுநரின் கருத்துக்கு பதிலடி என கூறப்படுகிறது.