காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் கடை நடத்தி வருபவர் ஜவஹர். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் , நகர அமைப்புச்செயலாளராக பணியாற்றி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்ப காலத்திலிருந்து இவர் உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாமக செல்வாக்கு பெற்ற பகுதியாக கருதப்படும் செவிலிமேடு பகுதியில், பாமகவின் முக்கிய பிரமுகராகவும் உள்ளார். 


 திமுக கொடிக்கம்பத்திற்கு எதிர்ப்பு


இந்நிலையில் செவிலிமேடு பகுதியில் உள்ள திமுகவினர், கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு  ஜவஹர் கடை அருகே  திமுக கொடி கம்பத்தை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.  அதைப் பார்த்த ஜவஹர் திமுக நிர்வாகிகளுடன் என் இடத்தில் கொடி வைக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.




ஒரு கட்டத்தில் ஜவஹர் மற்றும் பாமக ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொடி கம்பத்தை அகற்ற முயற்சி செய்தார். அதேபோன்று கொடிக்கம்பம் இங்கிருந்தால் தான்  பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என ஜவஹர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.


கொலை மிரட்டல் என புகார்


மேலும் அப்பகுதி திமுக நிர்வாகி அருள்மணியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஜவகர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற போது எதிர்தரப்பினர் பலரின் மேல் பெட்ரோல் பட்டதாகவும், தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி திமுகவினரும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, பாமக பிரமுகர் ஜவஹரும் காஞ்சி தாலுகா காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர்.




 பாமகவினர் சாலை மறியல்


இந்நிலையில் இத்தகவலை அறிந்த பாமகவினர் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து இருபுறமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி முரளி தலைமையிலான காவல்துறையினர் துரிதுமாக செயல்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்து  தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


மேலும் அப்பகுதியில் பதட்டத்தை தணிக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நடப்பட்ட கொடி கம்பத்தை அகற்றும் பணியும் நடைபெறும் என தெரிய வருகிறது.




 


இது தொடர்பாக  திமுகவை சேர்ந்த  காஞ்சிபுரம் மாநகராட்சி  பகுதி செயலாளர் சு. வெங்கடேசன் அளித்த புகாரில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு கொடிக்கம்பம்  நிறுவ சென்ற பொழுது  அப்பகுதியை சேர்ந்த ஜவஹர் என்பவர் தங்களை தகாத வார்த்தையில் திட்டியதாகவும்,  பெட்ரோல் பாட்டில் எடுத்து  கொளுத்தி விடுவேன் என மிரட்டியதாகவும்,  எங்கள் மீது தீக்குச்சிகளில் பற்ற வைத்து கொலை மிரட்டலில் ஈடுபட்டதாக  திமுக தரப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது




இது தொடர்பாக  பாமகவை சேர்ந்த  ஜவகர் அளித்துள்ள புகாரில்,   செவிலிமேடு பகுதியை சேர்ந்த 11 திமுக நிர்வாகிகள் 10 நாட்களுக்கு முன்பு என் கடை பக்கத்தில் திமுக கட்சி கொடி கம்பத்தை நடை முயற்சி செய்தார்கள்.  அப்பொழுது பிரதமர் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால்  தேர்தல் நடத்தி விதிகளை மீறக் கூடாது,  மேலும்  எனது வீட்டின் வாசல் முன்பு திமுக கொடி கம்பத்தில் நடை வேண்டாம் .  


அதற்கு அப்பொழுது திமுகவினர்  திமுக கொடிக்கம்பம் நடமாட்டோம் என உறுதி அளித்துவிட்டு கிளம்பினார்கள். இந்நிலையில் மீண்டும்  அத்துமீறி திமுக கொடி கம்பத்தை நடை முயற்சி செய்தார்கள். அதை நான் தடுக்க முயற்சி செய்த பொழுது  ”நீயா செத்துப் போய்விடு இல்லையென்றால் உயிரோடு விடமாட்டோம்” என மிரட்டினார்கள். இதனால் நான் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்  எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவகர் புகார் அளித்துள்ளார்