காஞ்சிபுரம் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி1 வெற்றி பெற்றன. இதில் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்து, திமுகவின் நகர செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தி காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரிக்கு எதிராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரி 4 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்னும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்ய வில்லை .
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கண்ணாடி தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஸ்ரீ பெரும்புதூர் காங்கிரஸார் ஸ்ரீ பெரும்புதூர் திமுக நகர செயலாளர் சதீஷ்குமார் மீது புகார் மனு அளித்துள்ளனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, காஞ்சிபுரம் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பேரூராட்சி தலைவர் பதவி கூட்டணி சார்பாக ஒதுக்கீடு செய்து தலைமை கழகம் அறிவித்திருந்தது.
இதை அறிந்த ஸ்ரீ பெரும்புதூர் திமுக நகர செயலாளர், சதீஷ்குமார் அவரது மனைவி சாந்தி சதீஷ்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து திமுக சார்பாக போட்டியிட்ட 5 திமுக கவுன்சிலர்கள் மற்றும் 4 சுயேச்சை கவுன்சிலர்களை, ஒரு அதிமுக கவுன்சிலரை மிரட்டி, பயம் கொடுத்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும், கூட்டணி கட்சி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் உடன் கலந்து ஆலோசிக்காமல் தான் தலைவராக வேண்டும்.
வெற்றிபெற்ற உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி கூவத்தூர் அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைத்து, திமுக நகர செயலாளர் சதீஷ் குமார் அவர்களின் மனைவியை ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்ய வைத்து, 20 நிமிடங்களிலேயே தலைவர் பதவிக்கான தேர்தலை முடித்துவிட்டு, அவரைத் தலைவர் என அறிவித்துவிட்டு காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தி விட்டதாக தமிழக முதல்வரிடம் நேரில் மனுவை வழங்கினார்.
மேலும், தங்களுடைய புகார் மனு மீது பரிசீலனை செய்து முதலமைச்சரின் கட்டளைப்படி பேரூராட்சி தலைவர் பதவியினை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வாங்கி தரும்படியும் கேட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் தன்னுடைய பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது