தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் அறிமுக கட்சியாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி போட்டியிடுகிறது. மக்கள் நீதிமய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் சென்னை, மயிலாப்பூரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த தனது மகள் அக்ஷரா ஹாசனுடன் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார். பின்னர், அவரும், அவரது மகளும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களித்தனர். வாக்களித்த பிறகு, கமல்ஹாசன் தனது விரலை உயர்த்தி, வாக்களித்த பின் வைக்கப்பட்ட மையை காண்பித்தார்.
மயிலாப்பூரில் வாக்களித்த கமல்ஹாசன் விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை செல்ல உள்ளார். பின்னர், அங்கிருந்து தான் போட்டியிட உள்ள கோவை தெற்கு தொகுதிக்கு சென்று, அங்கு வாக்குப்பதிவு நிலவரங்களை நேரில் பார்க்க உள்ளார். கமல்ஹாசன் முதன்முறையாக இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதால், அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.