ராகுல் காந்தியின் தேச ஒற்றுமைக்கான நடைபயணத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன், அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறித்து மக்கள் நீதி மையம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
டெல்லி சென்ற கமல்ஹாசன்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் யாத்ராவை கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாட்டில் தொடங்கிய இப்பயணம் கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களை கடந்து டெல்லியை அடைந்துள்ளது.
டிச.24ஆம் தேதி டெல்லியில் தனது ராகுல் காந்தி தொடங்கிய நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வீடியோ
இந்நிலையில் நடைபயணத்துக்குப் பிறகு கமல்ஹாசன் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் மொழி, கலாச்சாரம், விவசாயம், சீனா உள்ளிட்டஏராளமான விஷயங்கள் குறித்து ராகுல் காந்தியும், கமல்ஹாசனும் விவாதிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
"நியாயமானதாக இருக்காது"
"ஒரு இந்தியனாக நாட்டில் நடப்பவற்றை பார்த்து எனக்குள் எழும் கோபத்தை வெளிப்படுத்த வேண்டியது எனது கடமை. இந்த 2,800 கி.மீ ஒன்றுமே இல்லை. வேர்வையும் கண்ணீரும் ரத்தமும் நிறைந்த பாதையில் நீங்கள் நடத்திருக்கிறீர்கள். இந்த நடைப்பயணத்தில் உங்களுடன் பங்கேற்வில்லை என்றால் அது நியாயமானதாக இருக்காது" என கமல்ஹாசன் பேசினார்.
கமலுக்கு கொடுத்த பரிசு
கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி புலி புகைப்படத்தை ஒன்று பரிசாக கொடுத்துள்ளார். ஏனென்றால், இதற்கு ராகுல் காந்தி கூறியதாவது, ”உங்களின் வாழ்க்கை, அணுகுமுறை ஆகியவற்றை இந்த புகைப்படம் பிரதிபலிக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த இந்தியர் என்பதையும் சிறந்த தமிழர் என்பதையும் இந்த படம் குறிக்கிறது” எனக் கூறினார்.
மேலும், பாஜக உள்ளிட்டவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் என்னுடைய ஒற்றுமை யாத்திரையில் நீங்கள் பங்கேற்றது உண்மையிலேயே தைரியமான முடிவு என கமல்ஹாசனை பாராட்டியுள்ளார் ராகுல் காந்தி.
"வன்முறை எதற்கும் தீர்வாகாது"
நாட்டில் பரவியிருக்கும் பயத்தின் விளைவாகவே நான் இதை பார்க்கிறேன் எனவும் வன்முறை எந்த காரணத்திற்காகவும் தீர்வாகாது எனவும் ராகுல் காந்தி கமல்ஹாசன் கேள்விக்கு பதிலளித்தார். மகாராஷ்டிராவிற்கு சென்றாலும் மக்கள் அன்பை காட்டுவர், ஆனால் தமிழக மக்கள் அன்பு வித்தியாசமானது. உணர்ச்சிபூர்வமான அவர்களின் அன்பை கண்டு வியந்திருக்கிறேன் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
"நடைபயணம் பாராட்டுக்குரியதாகும்"
உரையாடலின்போது ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து பாரட்டும் விதத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார். அதன்படி, நீங்கள் மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை காது கொடுத்து கேட்பதால் தான் உங்கள் நடைபயணத்தை போற்றுகிறேன். எதோ ஒரு மேடையில் நின்று நீங்கள் பேசவில்லை. மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பது பாராட்டுக்குரிய விஷயமாகும் என்றார் கமல்.
"ஜி20 - பல அரசாங்கங்களின் உழைப்பு"
ஜி20 மாநாட்டின் தலைமையை இந்தியா ஏற்றிருப்பது என்பது ஒரு அரசால் நடந்தது இல்லை. பல அரசாங்கங்களின் உழைப்பு தான் என்று பெருமையாக பேசியுள்ளார் கமல். தொடர்ந்து பேசிய இவர்கள், இந்த 21ஆம் நூற்றாண்டில் மிக முக்கியமானது உள்நாட்டு ஒற்றுமை தான். நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டும். மக்கள் சண்டையிடக் கூடாது. நாட்டில் அமைதி நிலவ வேண்டும். மேலும் நாடு ஒரு குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.
ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த உரையாடலின்போது இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும் வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு மாற்றாக, ஒற்றுமை, அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனை பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர்.