பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் ஊழல் மற்றும் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளானதோடு, கருப்பு பணம் என்பது ஒழிக்கப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினர் குற்றம்சாட்டினர். இதனிடையே, மத்திய அரசின் பணமதிப்பிழப்பை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட, 58 மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் கீழ் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. 


பணமதிப்பிழப்பு செல்லும்:


அந்த தீர்ப்பில், ”பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய நடவடிக்கையை கொண்டு வருவதற்கு நியாயமான தொடர்பு இருந்துள்ளது.  மேலும் பணமதிப்பு நீக்கம் விகிதாச்சாரக் கோட்பாட்டால் பாதிக்கப்படவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். பணமதிப்பு நீக்கத்தை கொண்டு வர ரிசர்வ் வங்கிக்கு சுதந்திரமான அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதனை கொள்கை முடிவாக எடுத்துள்ளது. பணமதிப்பு இழக்கத்தின் நோக்கம் எட்டப்பட்டதா என்பது இந்த வழக்கில் முக்கியத்துவம் பெறவில்லை. எனவே, 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை உச்சநீதிமன்றம் ஆதரிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கை விசாரித்த நான்கு நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்க, நீதிபதி பி.வி.நாகரத்னா  மட்டும் பணமதிப்பிழப்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார்.


நீதிபதி பி.வி.நாகரத்னா சரமாரி கேள்வி:


மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாகரத்னா நீதிமன்றத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அப்போது  அவர், “பாராளுமன்றம் என்பது நாட்டின் ஒரு அங்கமாகும். ஜனநாயகத்தின் மைய்யப்புள்ளியாக விளங்கும் பார்லிமென்ட், பணமதிப்பிழப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் ஒதுக்கி வைக்க முடியாது” என்றார்.


ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த தரவுகளைப் பார்க்கும்போது, ​​"மத்திய அரசு விரும்பியபடி" என்ற வார்த்தைகள் உள்ளன. இது ரிசர்வ் வங்கியின் சுயவிருப்பம் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த முழு முயற்சியும் 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது” என கூறினார்.  


”பணமதிப்பிழப்பு மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டது. அதில் ரிசர்வ் வங்கியின் கருத்து கேட்கப்பட்டது. ரிசர்வ் வங்கி கருத்து வழங்கியதை ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 26(2)ன் கீழ் "பரிந்துரை" என்று கருத முடியாது. ரிசர்வ் வங்கிக்கு அத்தகைய அதிகாரம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அத்தகைய பரிந்துரை செல்லாது, ஏனெனில் பிரிவு 26(2)-ன் கீழ் உள்ள அதிகாரம் ஒரு குறிப்பிட்ட தொடர் நாணயத் தாள்களுக்கு மட்டுமே அது செல்லும். ஒட்டுமொத்தமாக அனைத்து தொடர்களுக்கும் இது பொருந்தாது.


நவம்பர் 8, 2016ஆம் ஆண்டு அறிவிப்பின்படி மத்திய அரசால் தொடங்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்ட விரோதமானது. ஆனால் இந்த நேரத்தில் பழைய நிலையை மீட்டெடுக்க முடியாது. இப்போது என்ன நிவாரணம் கொடுக்க முடியும்?”  என கேள்வி எழுப்பினார்.  


“இந்த நடவடிக்கை நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்டது. இது கருப்புப் பணம், பயங்கரவாத நிதி மற்றும் கள்ளநோட்டு போன்றவற்றை ஒழிக்க திட்டமிடப்பட்டது என்றாலும் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்ட அடிப்படையில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படுகிறது” என்றார்.