தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் போட்டியிட்டு முதலமைச்சர்களாக பதவி வகித்த நிலையில், 2 பேர்தான் என ஓபிஎஸ் நீக்கி இபிஎஸ் பேசியாதாக கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன.
ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டமானது, அதிமுக சார்பில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று நடைபெற்றது.
இபிஎஸ் தலைமையிலான அதிமுக கட்சியில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், பலர் கட்சிக்குள் கலகம் செய்வதாகவும், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை இணைக்க வேண்டும் என இபிஎஸ்-க்கு எதிராக மூத்த தலைவர்களே வலியுறுத்துவதாகவும் பெரும் சர்ச்சை நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரியகுளமானது, ஓபிஎஸ்-ன் சொந்த ஊர் என்பதால், இன்றைய பொதுக்கூட்டத்தை ,இபிஎஸ் தலைமையிலான அதிமுக அங்கு கூட்டம் நடத்துவது , ஓபிஎஸ்-க்கு சவால் விடுவதை போன்று இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும், தென் மாவட்டங்களில் , எனக்கு ஆதரவு இருக்கிறது என்பதை காண்பிக்கும் வகையில் இக்கூட்டத்தை இபிஎஸ் நடத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.
2 முதலமைச்சர்கள் கொடுத்தது தேனியா?
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ தேனி மாவட்டம் இரண்டு முதலமைச்சர்களை கொடுத்துள்ளது என தெரிவித்தார். அதாவது, தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் போட்டியிட்டு முதலமைச்சர்களாக பதவி வகித்தனர்.
ஆனால், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ், சில காலங்கள் 3 முறை முதலமைச்சராக இருந்தார். ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறார்.
தேனி மாவட்டத்தில் போட்டியிட்டு மூன்று பேர் முதலமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஒன்று எம்.ஜி.ஆர் , இரண்டு ஜெயலலிதா மற்றும் மூன்றாவது ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ், ஜெயலலிதா சிறை சென்றபோது 2 முறை முதலமைச்சராகவும் ( செப்.21,2001- மார்ச் 2, 2002 ) ( 28 செப், 2014- 23 மே, 2015 ), மற்றும் மறைந்த போது ( டிச.6, 2016-16, 2017 ) முதலமைச்சராக பதவி வகித்தார். ஆனால், ஓபிஎஸ்-ஐ குறிப்பிடாமல் , 2 முதலமைச்சர்களை, தேனி கொடுத்துள்ளது என இபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.
மேலும், 1989-லிருந்து எம்.எல்.ஏ, நான்தான் சீனியர் என ஓபிஎஸ்-ஐ குறிப்பிடுவது போன்று பேசினார். மேலும், இங்கே ஒருத்தர் இருக்கிறார், அவர் ஒரு மூழ்கும் கப்பல் எனவும் இபிஎஸ் தெரிவித்தார்.
”இது ஸ்டாலின் மாடல்”
மேலும், தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாகவும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இது திராவிட மாடல் அல்ல, ஸ்டாலின் மாடல்.
தேனி மாவட்டத்திற்கு பல நலத்திட்டங்களை கொடுத்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவர் இன்னும் வெளிச்சத்திர்கு வரவில்லை என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.