234 தொகுதிகளிலும் விஜய் யாரை கைகாட்டுகிறாரோ அவர் தான் சட்டமன்ற உறுப்பினர்களாக மாறப் போகிறார்கள் என ஈரோடு தேர்தல் பரப்புரையில் அக்கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். கடந்த டிசம்பர் முதல் வாரம் புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்ட அவர், இன்று (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் செய்திருந்தார்.
அதிகாலை முதலே மக்கள் நிகழ்ச்சி நடைபெறும் விஜயபுரி அம்மன் கோயில் திடலுக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்ற விஜய் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு சென்றார்.
விஜய் பெயரைக் கூட சொல்லாத செங்கோட்டையன்
இந்நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், “பெரியார் பிறந்த மண்ணில் தவெக தலைவர் விஜய் வருகை தந்திருக்கிறார். இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வரலாற்றை அவர் படைக்கும் என்பதற்கு சான்றாக உள்ளது. ஆட்சிக்கு வர வேண்டும் என பல பேர் கனவு காண்பதாக பலரும் சொன்னார்கள். ஆனால் நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சித் தளபதி தான். இதை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கான காட்சி தான் பெரியார் மண்ணில் கூடியுள்ள இந்த கூட்டமாகும்.
பெரியாரின் கூற்றுப்படி, ஏழைகளின் கண்ணீரை துடைக்க ஒரு நல்ல தலைவர் வேண்டுமென்று மக்கள் கண்ட பலநாள் கனவு இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விஜய் மனிதநேய மிக்கவர், நல்லவர்,வல்லவர், உங்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது. ஏனென்றால் ஒரு ஆண்டிற்கு ரூ.500 கோடி வருவாய் வேண்டாம் என உதறி தள்ளி விட்டு மக்களுக்கு பணியாற்ற வந்திருக்கிறார். அப்படியான வகையில் உலக அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரை புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பார்த்தேன். இன்று புரட்சித் தளபதி விஜய்யை பார்க்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையிலும் இது தீர்ப்பளிக்கிற கூட்டம். நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது. உங்கள் அனைவரின் எதிர்காலம் பிரகாசமாக போகிறது. 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கைகாட்டுகிறாரோ அவர் தான் சட்டமன்ற உறுப்பினர்களாக மாறப் போகிறார்கள். அந்த வரலாற்றைப் படைக்கும் அளவுக்கு வெற்றியைத் தேடி தாருங்கள்” என தெரிவித்தார்.
செங்கோட்டையன் தனது உரையில் ஒரு இடத்தில் கூட விஜய்யின் பெயரை சொல்லாமல் அவரை புரட்சித் தளபதி என அவரை அழைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.