தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அப்போது, அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டினார். பின்னர், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்த பிறகு, அப்போதைய அ.தி.மு.க. அரசு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தனர்.




இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடைகோரி அப்போலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின்போது ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட ஆணையத்தை அமைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது. தமிழக அரசு சார்பில் ஆஜராஜ வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இந்த தகவலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.


அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் பொறுப்பு வகித்த ஜெயலலிதா திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை, கிரீம்ஸ்வே சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான புகைப்படங்களோ, வீடியோக்களோ ஏதுமே மருத்துவமனை சார்பிலோ, அரசின் சார்பிலோ வெளியிடப்படவில்லை. ஆனால், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவை சந்தித்தாகவும், பேசியதாகவும் அவ்வப்போது பேட்டி அளித்து வந்தனர்.




அவரது மறைவிற்கு பிறகு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தர்மயுத்தம் நடத்தியதும், அதன்பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்களும் தமிழக அரசியல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆறுமுகசாமி ஆணையத்தினர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர், உதவியாளர், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என்று பலரிடமும் விசாரணை நடத்தியுள்ளது. ஆனால், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வமும், அப்போலோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டியும் இதுவரை ஒருமுறைகூட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்