தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்து விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி த் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ் குமார் கூறுகையில்,



இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தேர்தல் வாக்குறுதியை பெட்ரோல் ரூ.6, டீசலுக்கு ரூ.3 குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தது திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களை ஏமாற்றுகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையும் மீதான வரியை மாநில அரசு குறைத்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் வரியை குறைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.  தற்போது நிலவி வரும் சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் இங்கிருந்து செல்லும் பொழுது அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடக மாநிலங்களில் பெட்ரோல் , டீசலை நிரப்பி செல்வதால் தமிழக அரசுக்கு மாதம் தோறும் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இது நாளடைவில் மாநில பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் என்பதாலும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை உடனடியாக குறைக்க வேண்டும், இல்லை என்றால் மாநிலம் தழுவிய கண்டன போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.



சேலம் மாவட்டத்தில் இன்று தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதை கண்டிக்கும் விதமாக சேலம் மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி ஸ்ரீ தக்காளி மாலையை கழுத்தில் அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார் மற்றும் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மீதான வாட் வரியை குறைக்காத திராவிட முன்னேற்ற கழகம் அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.