தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவித்தது.


அதன்படி, நிலத்தை கையகப்படுத்துவதற்கு தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியது. இதன் மூலம், ஜெயலலிதா குடியிருப்பு அரசின் சொத்தாகியது. வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் நகர  நீதிமன்றத்தை நாடி, தங்களுக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 


இந்த நடவடிக்கையை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 




அந்த மனுவில், "காலஞ்சென்ற ஜெயலலிதா என்ற தனிநபர் வாழ்ந்த குடியிருப்பை அரசுடமையாக்க அரசுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். குடியிருப்பை, நினைவில்லமாக மாற்றவும் தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கில், தங்களை நேரடி வாரிசு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.


ஆனால்,  தங்களிடம் கலந்தாலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர நீதிமன்றத்தில்  வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலைப்பாடு சட்டத்திற்கு எதிரானது” என குறிப்பிட்டிருந்தனர்.




இந்த மனுவை நீதிபதி சேஷாயி விசாரித்துவந்தார். இந்நிலையில் அவர் இன்று வழங்கிய தீர்ப்பில் , “வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.


அதுமட்டுமின்றி மூன்று வாரங்களில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் வேதா நிலையத்தை ஒப்படைக்க வேண்டும். வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடங்கள் எதற்கு என்றும் கேள்வி எழுப்பினார்.


இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “ஒவ்வொரு தொண்டரின் எண்ணத்திலும் வேதா இல்லம் கோயிலாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரத்தில் எடுக்கப்படும் மேல் நடவடிக்கை குறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்கும்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Vedha Illam: அதிகாரம் ஒருங்கிணைந்த ஒரே இடம்... சாதா இல்லம் இல்லை இது... வேதா இல்லம்!