பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  25 எம்எல்ஏக்கள் தனது கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். 


2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “காங்கிரஸைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் அவர்களின் குப்பைகளை நாங்கள் எடுக்க விரும்பவில்லை. அவர்களை சேர்க்க விரும்பினால், இன்று மாலைக்குள் காங்கிரஸின் 25 எம்.எல்.ஏ.க்களும், இரண்டு, மூன்று எம்.பி.க்களும் எங்களிடம் இருப்பார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று கூறினார். 


 


மேலும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இருவர் மட்டுமே வெளியேறியுள்ளதாகவும்,  காங்கிரஸில் இருந்து பலர் எங்களுடன் சேர தயாராக உள்ளதாகவும், ஆனால் நாங்கள் மோசமான அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்றும் கெஜ்ரிவால் கூறினார்.






மேலும், பஞ்சாபின் பொக்கிஷத்தை காங்கிரஸ் கொள்ளையடிப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். 5 ஆண்டுகளாக பஞ்சாபை கொள்ளையடித்த காங்கிரஸ், தற்போது மாநில கஜானா காலியாக உள்ளது என்று கூறினார். 5 ஆண்டுகளாக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கஜானாவை காலி செய்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.


பஞ்சாபில் கல்வி முறையில் தீவிர மாற்றங்களை கொண்டு வருவது குறித்தும் கெஜ்ரிவால் பேசினார். மேலும், ஒப்பந்த ஆசிரியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்குவது, காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்புவது, ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிப்பது, உரிய நேரத்தில் பதவி உயர்வு, பணமில்லாச் சிகிச்சை அளிப்பது என அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.


முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அமைத்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்  என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். 


பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கலாம் எனவும் கருத்து கணிப்புகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண