தமிழ்நாடு அரசியலில் கோபாலபுரம், ராமாவர தோட்டம்,  போயஸ் கார்டன் வேதா இல்லம் ஆகிய இடங்கள்  முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ்நாட்டின் மூன்று முகங்களாக வாழ்ந்த கருணாநிதி,  எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்த அந்த இடங்களில் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிப்போட்ட பல திட்டங்கள் பிறந்தன.


குறிப்பாக போயஸ் கார்டன் பல்வேறு காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும் சரி, உயிரிழந்த பிறகும் சரி போயஸில் இருக்கும் பரபரப்புக்கும், செய்திகளுக்கு பஞ்சமில்லை. அப்படி இன்று மீண்டும் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது வேதா இல்லம். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டது. 




இதற்கு ஜெ வாரிசுகளான தீபாவும், தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றார்கள். அவர்கள் தாக்கல் செய்த வழக்கில், “வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது செல்லாது. தீபாவிடமும், தீபக்கிடமும் வேதா இல்லத்தை ஒப்படைக்க வேண்டும்” என தீர்ப்பளித்துள்ளது.இந்தச் சூழலில் வேதா இல்லத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். 


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தாயார் சந்தியாவும் இணைந்து தற்போது வேதா இல்லம்  அமைந்திருக்கும் 24,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை 1967ஆம் ஆண்டு ரூ.1.32 லட்சத்திற்கு  இடத்தை வாங்கினர். 24,000 சதுர அடியில் மொத்தம் 21,662 சதுர அடிக்கு வேதா இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த இல்லத்தின் கிரகப்பிரவேசம் 1972ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படுகிறது.  




இதற்கிடையே துரதிர்ஷ்டவசமாக வேதா இல்லம் முழுமை அடையும் முன்னரே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா உயிரிழந்துவிட்டார். அதன் பின்பு தனிமையே துணை என்று இருந்த ஜெயலலிதா அரசியலுக்குள் வருவதற்கு காலம் கட்டளையிட்டது. அந்தக் காலகட்டத்தில் பல முக்கிய முடிவுகளை வேதா இல்லத்தில் வைத்தே ஜெயலலிதா எடுத்தார்.


அதேபோல், போயஸில் தொண்டர்களை சந்தித்தால் வேதா இல்லத்தின் பால்கனியிலிருந்து அவர்களைப் பார்த்து ஜெயலலிதா இரட்டை விரலை அசைப்பார். ஜெயலலிதா பால்கனி பாலிடிக்ஸ் செய்கிறார் என்ற விமர்சனம் வந்ததும் இந்த வேதா இல்லத்தால்தான்.


வீட்டிற்குள் நுழைந்தவுடன் வலதுபுற கட்டடத்தின் கீழ்  பகுதியில் தனி பாதுகாவலருக்கான அறையும், இரண்டாவது தளத்தில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கென்று தனி அறையும்  இருக்கும். மூன்றாவது தளத்தில் முதலமைச்சரின் தனி செயலாளருக்கான அறையும், முக்கிய கட்டடத்தின் மேல் தளத்தில் ஜெயலலிதாவுக்கான தனி அறையும் அமைந்திருக்கும்.  ஜெயலலிதாவின் அறைக்குள் வெளி நபர்கள் யாருக்கும் அனுமதி இல்லை சசிகலாவைத் தவிர. 




ஜெயலலிதாவுக்கு மட்டுமின்றி சசிகலாவுக்கு வேதா இல்லத்தில் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.  அதுமட்டுமின்றி பார்வையாளர்களுக்கென தனி அறையும் அமைக்கப்பட்டிருந்தது. இப்படி பிரமாண்டமான வேதா இல்லம் இனி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபாவிடமும், தீபக்கிடமும் செல்லவிருக்கிறது.


பல நல்ல முடிவுகளும், சர்ச்சையான முடிவுகளும், அதிமுகவினர் பல பேரின் தலையெழுத்தும் எழுதப்பட்ட வீடான வேதா இல்லத்தை இருவரும் பத்திரமாக பாதுகாத்து நல்லமுறையில் பராமரிக்க வேண்டுமென்பதே ரத்தத்தின் ரத்தங்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண