இரும்பு பெண்மணி ஜெயலலிதா
இரும்பு பெண்மணியாக வாழ்ந்து மறைந்துள்ளார் ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த ஜெ. ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி 2016ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்த நாள் இன்று. ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் தனி சாம்ராஜ்யத்தையே நடத்தியவர் அவர். ஒரு கிளைக் கழக செயலாளரை அமைச்சராக்கவும், செல்வாக்கோடு உச்சத்தில் அமர்ந்திருந்த அமைச்சர்களை ஒரே இரவில் ஒன்னுமில்லாமல் ஆக்கவும் ஜெயலலிதா என்ற ஆளுமையால் மட்டுமே முடிந்திருக்கிறது. தான் யாரை நினைக்கிறாரோ அவர்தான் எம்.எல்.ஏ, எம்.பி. அமைச்சர். அவருக்கு செல்வாக்கு தேவையில்லை. முகவரி தேவையில்லை. ஏன் பெயர் கூட தேவையில்லை.
ஜெயலலிதாதான் அவர்களின் செல்வாக்கே, ஜெயலலிதாதான் அவர்களின் முகவரி, ஜெயலலிதாதான் அவர்களின் பெயர். மக்கள் மத்தியில் எந்த அறிமுகமும் இல்லாதவரை கூட தன்னுடைய முகத்தின் அடையாளத்தை வைத்து கோட்டையில் ஏற்றியவர் அவர். அவருக்குதான் அந்த துணிச்சல் வாய்த்தது. மக்களும், குறிப்பாக பெண்களும் ஜெயலலிதாவை தங்கள் தலையில் வைத்துக் கொண்டாடினார். தாங்கள் செய்ய முடியாததை ஒரு பெண்ணாக ஜெயலலிதா செய்கிறாரே என்று வியந்து போற்றினார்கள்.
ஜெயலலிதாவின் சாம்ராஜ்யம்
அதே நேரத்தில், தன்னை மீறி வளர நினைத்தோலோ, தனக்கு எதிராக பேச நினைத்ததோலா அவ்வளவு தான். கட்சியில் எந்த பொறுப்பில் இருந்தாலும் அடுத்த நொடியே பதவி பறிக்கப்படும். பதவி என்ன? கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கூட அவர் காணாமல்போவார்கள். அப்படி காணாமல் போனவர்களின் பட்டியல் அதிமுகவில் வெகு நீளம். அதுதான் ஜெயலலிதா.
அமைச்சர்கள் இரவு தூங்கும் போதும் காலையில் அமைச்சராக இருப்போமா.? மாட்டோமா என அஞ்சி, அஞ்சி தூங்கிய காலம் உண்டு, காலையில் கண் விழித்ததும் வீட்டின் வாசலில் போலீஸ் வாகனம் உள்ளதா என எட்டிப்பார்த்த அமைச்சர்களும் உண்டு. ஒரு நொடிபொழுதாவது ஜெயலலிதாவின் பார்வை தன் மீது விழாதா? என பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஏங்கி, ரோட்டின் ஓரமாக பத்தோடு பதினொன்றாக நின்ற நாட்களும் உண்டு. அவர் காரில் போனால் சாலையை பார்த்து வணங்குவார்கள், ஹெலிகாப்டரில் போனால் வானத்தை பார்த்து கும்பிடுவார்கள். அப்படி ஒரு பயம். அப்படி ஒரு மரியாதையை ஜெயலலிதாவிற்கு அதிமுவினர் கொடுத்தனர். அதனால்தான், இரும்பு பெண்மணி என்று அவரை தமிழ்நாடே அழைக்கிறது.
மோடியா.? லேடியா.?
ஆண்கள் செய்யத் துணியாததை கூட ஜெயலலிதா செய்தார். அவர் சந்திக்காத நெருக்கடிகளா ? அவமானங்களா ? துயரங்களா? எல்லாவற்றிலும் இருந்து ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி மீண்டெழுந்தவர் அவர். அவரை துயரத்திற்கு உள்ளாக்கிய அத்தனை பேரையும் தூள்தூளாக்கினார். மோடியை கண்டு நாடே அஞ்சிய போது, மோடியா இல்லை இந்த லேடியோ என கேட்டு நாட்டையே திருப்பி பார்க்கவைத்தவர் ஜெயலலிதா. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் அலை நாடு முழுவதும் வீசிய போது, தமிழகத்தில் ஜெயலலிதாவின் அலை தான் வீசுகிறது என நிரூபித்து 38 தொகுதிகளையும் அள்ளியவர்.
ஆனால் அவரது மறைவிற்கு பிறகான இந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டுமல்ல அதிமுகவிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவு வரை அமைதி காத்து வந்த நிர்வாகிகள், அடுத்து அதிகாரத்தை கைப்பற்ற போட்டி போட்டனர். நான் தான் தலைவர், நான் தான் முதலமைச்சர் என மோதிக்கொண்டனர். இதனால் ஜெயலலிதா நினைவிடத்திலேயே தர்மயுத்தம், கூவத்தூரில் எம்எல்ஏக்கள் உல்லாசம், அதிமுக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் என அடுத்தடுத்து அதிமுக வரலாற்றில் கரும்புள்ளிகள் ஏற்பட்டன.
கர்ஜித்த ஜெயலலிதா
ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு பயந்து பம்மிய தலைவர்கள் எல்லாம் வெளிப்படையாக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான், இவர்களெல்லாம் இப்படி பேசுவார்களா? என்றே மக்கள் பார்த்து வியக்கத் தொடங்கினர். மோடியா ? லேடியா ? என சவால் விட்ட ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் பலர் மோடி எங்கள் டாடி என பேச தொடங்கினர். இந்தியாவின் 3வது உட்சபட்ச கட்சியாக இருந்த அதிமுக, கடந்த 9 வருடங்களில் தாம் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்விக்கு மேல் தோல்வியையே சந்தித்து வருகிறது.
தனக்கு பிறகும் அதிமுக 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என கர்ஜித்த ஜெயலலிதாவின் 9 வது வருட நினைவு நாளில் அதிமுக மீண்டும் ஒன்றுபடுமா ?, பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பார்களா.? மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைக்குமா ? என ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்..!