தமிழ்நாட்டில் கால் பதிக்க முயற்சி

Continues below advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி ; 

திருப்பரங்குன்றம் பகுதியில் ஒரு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. அது தமிழகத்தில் பேசி பொருளாகி உள்ளது. இந்துத்துவ அமைப்புகள் எப்படியாவது தமிழ்நாட்டில் கால் பதிக்க வேண்டும் என்று இதை கையில் எடுத்திருக்கிறார்கள்.

Continues below advertisement

கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படுவது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இதனை முருகனுக்காக கொண்டாடுவார்கள் இதில் இந்து துவாவிற்கு வேலையில்லை.

நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். முதலமைச்சர் போல் சட்டத்தை மதிப்பவர்கள் இந்தியாவிலேயே கிடையாது. தமிழ்நாட்டின் சட்டத்தின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தில் மறைத்து , புதிய தீர்ப்பு

2014 - ம் ஆண்டு , வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபத்தை ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பு குறித்து அறியாமல் அதனை தவிர்த்து விட்டு புதிதாக ஒரு வழக்கை தொடுத்து இந்த தீர்ப்பை பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய தீர்ப்பை அப்படியே விட்டு விட்டு ,  நீதிமன்றத்தில் மறைத்து விட்டு புதிதாக ஒரு தீர்ப்பை பெற்றால் அனுமதித்து விட முடியுமா ?

வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆதரவாக பேசுபவர்கள் மீது 2014 ஆம் ஆண்டு வெளியான தீர்ப்பின் அடிப்படையில் வழக்கு தொடர தமிழக அரசுக்கு முகாந்திரம் உள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர்களுக்கு வேண்டுமென்றால் அடிமை , பழனிச்சாமி கிடைப்பாரே தவிர வேறு அடிமை யாரும் தமிழ்நாட்டில் கிடைக்க மாட்டார்கள். தமிழ்நாடு என்பது மத ஒற்றுமை மத நல்லிணக்கம் எடுத்துக்காட்டாக உள்ள மாநிலம்.

இந்துத்துவா கைக் கூலிகளுக்கு எடப்பாடி துணை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்துறை மூலமாக ஆராய்ந்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலை கிடையாது. தமிழ்நாடு அரசை பற்றி குறை கூறுவது தான் அவர் வேலை. இந்த விவகாரத்தில் தமிழக அரசிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அவர் , இந்துத்துவா கூலிகளுக்கு துணையாக எடப்பாடி  இருந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் , அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து தன் கட்சி எடுத்த நிலை என்ன என்பதே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார்.

தடுக்க தயாராக இருக்கிறோம்

எங்களைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை தமிழ்நாடு காவல் துறை சிறப்பாக செய்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதை மீறி எந்த சக்தி வந்தாலும் அதனை தடுப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

இந்து அமைப்புகளின் செயல்பாடும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடும் வேறு வேறு கிடையாது இரண்டும் ஒன்று தான்.

தொடர்ந்து பேசிய கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி ; 

2014 இல் வழங்கிய தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் வழங்கப்பட்டது. ஒருவேளை இந்த தீர்ப்பு சரியில்லை என்றால் அந்த அம்மையாரே அப்போது மேல்முறையீட்டுக்கு சென்று இருப்பார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பெறப்பட்ட தீர்ப்பிற்கு , இது முரணாக இருப்பதினால் தான் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு என்பது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்குள்ளான அதனை விமர்சிப்பது கருத்து தெரிவிப்பது சரியல்ல பொறுத்திருந்து பார்ப்போம்.