அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, அவருடைய சொந்த மாவட்டமான சேலத்திற்கு நேற்று வருகை தந்தார். சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலில் சேலம் புறநகர் அதிமுக சார்பில் மற்றும் சேலம் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் நெடுஞ்சாலை நகர் ஆகிய இடங்களில் அதிமுக நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேல தாளங்கள் முழங்க மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பினைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. முந்தைய அதிமுக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே முதலமைச்சர் திறந்து வைத்து வருகிறார். இன்னும் ஒரு வருட காலத்திற்கு அதிமுக அரசு திட்டங்களையே திறந்து வைக்க முடியும். அவ்வளவு அதிகமான திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியது. புதிய மாவட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டன. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் மருத்துவராகும் வாய்ப்பினை 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் அதிமுக மீண்டும் எப்போதும் ஆட்சிக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எப்போது தேர்தல் நடத்தினாலும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்.


 


அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதற்காக ஒரு குழு அமைத்து விடுகிறது. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 37 குழுக்களால் ஏதும் பயனில்லாத நிலையில் உள்ளது. திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். அதனால் எதையும் செயல்படுத்த முடியவில்லை. அதிமுக ஆட்சியில் சிறந்த செயல்பாட்டிற்காக மத்திய அரசின் விருதுகளை பல்வேறு துறைகள் பெற்றன. தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.


 


போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. பலமுறை எடுத்துக் கூறியும் உரிய நடவடிக்கை இல்லாததால்  போதைப் பொருள் புழக்கம் அதிக அளவில் உள்ளது. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் அவர்களே வீழ்ந்து போவார்கள். அதிமுக சொந்த உழைப்பால்தான் நிலைத்து நிற்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திய கட்சிக்கு சேலத்தை சேர்ந்த எனக்கு இடைக்கால பொதுச் செயலாளர் வாய்ப்பினை பொதுக்குழு உறுப்பினர்கள்  அளித்துள்ளனர். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய துணை நிற்க வேண்டும் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண