தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவுக்கு செக் வைக்கும் வகையில் மாநில முதலமைச்சர்களை ஒரே இடத்தில் திரளவைத்து அதிரடி காட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதிலும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி எம்.பி, தமிழ்நாட்டிற்கு வந்து ட்விஸ்ட் கொடுத்துள்ளார். ஆனால் இதன் பின்னணியில் பவன் கல்யாணின் திட்டம் இருக்கிறது என கூறப்படுகிறது.
தொகுதி மறுவரை கூட்டம்:
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரை சீரமைப்பு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்ததற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பம் முதலே எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. தமிழ்நாட்டில் எம்.பி தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் என மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்க நினைத்தார் ஸ்டாலின்.
முதலமைச்சரின் அழைப்பை ஏற்று கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஒரே இடத்தில் குவிந்து அதிரடி காட்டியுள்ளனர். தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும் என கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரகசியமாக ஜன சேனா கட்சி பங்கேற்பா?
இதில் ஒரு ட்விஸ்ட்டாக பாஜக கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி சார்பாக எம்.பி உதய் ஸ்ரீனிவாஸ் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தததாகவும், ஆனால் அவர் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கொடுத்த கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சேர்ப்பதற்காகவே அவர் சென்னைக்கு நேரில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பவன் கல்யான் சாதுர்யம்:
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பவன் கல்யாண் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று தனது கட்சி சார்பாக எம்.பியை அனுப்பி வைத்துள்ளார். அதே நேரத்தில் கூட்டணிக்குள்ளும் குழப்பம் வராத வகையில் கூட்டத்தில் ஜனசேனா கட்சி உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மாநில கட்சிகளுக்கு இடையிலான உறவை பாதுகாப்பதிலும், கூட்டணியிலும் குழப்பம் வராத வகையிலும் பவன் கல்யாண் சாதுர்யமாக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.