அண்ணாமலைக்கு எங்களை பற்றி நன்றாக தெரியும், அவர் பாவம் , விடுங்கள் அவர வேலையை பார்க்கட்டும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததற்கு, முதலமைச்சர் சித்தராமையா சீட்டை அகற்றும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் என அண்ணாமலையும் பதிலளித்து நன்றி தெரிவித்திருக்கிறார். 

பல மாநில தலைவர்கள் கூட்டம்:

தற்போதைய மக்கள் தொகுதி அடிப்படையில் நாடாளுமன்றத்தின் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் , நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் சார்பில் கூட்டம் நடத்த , தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். 

இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் , ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆந்திர முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட 24 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்த மேஜையின் மீது உள்ள பெயர்ப் பலகையானது, அவர்களது தாய் மொழியிலும் மற்றும் ஆங்கிலத்திலும் பெயர் இடம் பெற்றிருந்தது. 

”அண்ணாமலைக்கு நாங்க யார்னு தெரியும்”

இந்நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது “ தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில உரிமைகளை காக்க கூடியுள்ளோம். கல்வி , பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் தென் இந்திய மாநிலங்கள் முன்னேற்றமடைந்த மாநிலங்களாக இருக்கிறது. தொகுதி மறுவரையில் , எம்.பி-களின் எண்ணிக்கையை குறைப்பதை , ஏற்றுக் கொள்ள மாட்டோம். 

இது எங்களின் பிரச்னை மட்டும் இல்லை. இது, எங்களின் மக்கள் பிரச்னை; நம் நாட்டின் பிரச்னை. மாநில உரிமைகளுக்காக , போராட தயாராக இருக்கிறோம். 

இந்த கூட்டத்திற்கு பாஜக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்துவதை , வரவேற்கிறேன். பாஜக , என்னை கைது செய்து , சிறையிலும் அடைத்திருந்தது, எனக்கு பயம் எல்லாம் இல்லை. இந்த ஆபிஸர் என அண்ணாமலையை குறிப்பிட்டு பேசிய டி.கே.சிவக்குமார், இவர் எங்கள் மாநிலத்தின் காவல் துறையில் பணியாற்றினார். அவருக்கு , நாங்கள் யார் என்றும், எங்களை பற்றியும் தெரியும், எங்களின் பலம் குறித்து தெரியும். அவர் பாவம் ( Poor Man ) , அவரது வேலையை பார்க்கட்டும் விடுங்கள், அவருக்கு வாழ்த்துகள் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். 

”முதல்வராகும் முயற்சிக்கு வாழ்த்துகள்”

இதையடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது “ எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக அண்ணாமலை சிவகுமாருக்கு நன்றி தெரிவித்தார். "ஆம், நான் ஒரு காவல்துறை அதிகாரியாக கர்நாடக மக்களுக்காக சேவை செய்தேன். குறிப்பிடத்தக்க வகையில் என்னை குறிப்பிட்டு பேசியதற்கு நன்றி. மேலும், இந்த ஏழை மனிதனுக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி,

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை, அவரது நாற்காலியில் இருந்து அகற்றி , கர்நாடக முதல்வராகும் உங்களின் அயராத முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.