அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


மாஸ் காட்டும் INDIA கூட்டணி:


அதே சமயத்தில், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சிகளுடன் காங்கிரஸ், சமீபத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது.


அதன்படி, உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சி போட்டியிட உள்ளது. 


அதேபோல, டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4இல் ஆம் ஆத்மியும் 3இல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளது. கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் சண்டிகரில் உள்ள 1 தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.


ஜம்மு காஷ்மீர் தொகுதி பங்கீட்டில் உடன்பாடா?


இந்த நிலையில், 7ஆவது மாநிலமாக ஜம்மு காஷ்மீரிலும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம்  உள்ளன. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள 6 மக்களவை தொகுதிகளில் 3இல் தேசிய மாநாட்டு கட்சியும் 2இல் காங்கிரஸ் கட்சியும் 1இல் மக்கள் ஜனநாயக கட்சியும் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


சில தினங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரில் தனித்து களமிறங்க உள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார். ஆனால், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரும் பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார்.


இச்சூழலில், ஜம்மு காஷ்மீரில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் 
I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகியது, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை தந்தது. 


ஆனால், அதன்பிறகு, 7 மாநிலங்களில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு உத்வேகம் தரும் வகையில் அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டாலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் INDIA கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.