கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றோடு திமுக தொகுதி பங்கீடே செய்துவிட்ட நிலையிலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்ட நிலையிலும் இன்னும் அதிமுக தன்னுடைய கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில், ஜி.கே.வாசன் அதிமுகவுடனான கூட்டணியை தவிர்த்து, பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான ஜெயக்குமாரிடம் பேசினோம்.
கேள்வி : ஜி.கே.வாசன் அதிமுக கூட்டணிக்கு வர விருப்பமின்றி, பாஜகவிற்கு சென்றிருக்கிறார். பல முறை அதிமுக சார்பில் பேச்சு நடத்தப்பட்டும் அவர் பாஜகவிற்கு சென்றது பின்னடைவு என கருதுகின்றீர்களா ?
ஜெயக்குமார் : வாசனால் அதிமுகவிற்கு எந்த பின்னடையும் இல்லை. அவர் கட்சி எடுத்த முடிவின்படி அவர் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். யாரையும் வலுக்கட்டாயமாக அதிமுக கூட்டணியில் இழுத்து வந்து இணைக்க வேண்டிய அவசியத்தில் அதிமுக இல்லை. வாசன் நல்ல நண்பர். அவர் எங்கிருந்தாலும் வாழ்க.
கேள்வி : திமுக தன்னுடைய தொகுதி பங்கீடு வரை சென்றுள்ள நிலையில், அதிமுகவால் இன்னும் கூட்டணியை கூட உறுதிப்படுத்த முடியாத நிலை இருக்கிறதே ?
ஜெயக்குமார் : தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றது. தேர்தல் அறிப்பு வருவதற்கு முன்னரே எவ்வளவோ மாற்றங்கள் வரலாம். கூட்டணியை உறுதி செய்தி, தொகுதி பங்கீடு பற்றி உட்கார்ந்து பேசிவிட்டால், மக்கள் ஆதரவு அவர்களுக்கு உள்ளது என்று அர்த்தமாகிவிடுமா? மக்கள் ஆதரவு எங்கள் பக்கம் இருக்கும்போது நாங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. விரைவில் அதிமுக தலைமையிலான உறுதியான கூட்டணி அமையும்.
கேள்வி : பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவிலான வெற்றியை இந்த முறை பாஜக பெறும் என்று மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே
ஜெயக்குமார் : தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு எப்போதும் இனி வாய்ப்பில்லை என்று ஏற்கனவே முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் யார் முதுகிலாவது ஏறி சவால் செய்வதே அவர்களுக்கு வழக்கமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக என்பது வெற்று பிம்பம் அவ்வளவுதான்.
அண்ணாமலை என்பது ஒரு மாயை. அவரது பிம்பம் வார் ரூமால் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எத்தனை பூத் கமிட்டிகள் உள்ளன ? பாஜகவில் தமிழ்நாட்டில் வளர்ந்தது என்பதெல்லாம் வடிகட்டிய பொய். அது இந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே வெட்ட வெளிச்சமாய் தெரிந்துவிடும். கத்திரிக்காய் முத்தினால் கடைத் தெருவிற்கு வந்துதானே ஆக வேண்டும் ?
கேள்வி : திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுகவுடன் மறைமுகமாக பேசி வருகின்றார்கள் என்று வெளியாகும் தகவல் உண்மைதானா ? அப்படி திமுக தோழமை கட்சிகள் உங்களுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனவா ?
ஜெயக்குமார் : தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிக்குள் மாற்றம் வரும். அப்படிதான் இந்த கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும். எந்த கட்சி எங்களுடன் பேசுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.
அப்படி சொன்னால், திமுக அலெர்ட் ஆகிவிடும். கேட்கிற தொகுதிகளும் மரியாதையும் திமுகவிடம் கிடைக்கவில்லையென்றால் அதிமுகவை நோக்கிதான் அவர்கள் வர வேண்டும். எங்களிடம் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில்தான் தொகுதி பங்கீட்டை விரைவாக முடிக்க திமுக நினைக்கிறது. விரைவில் நல்லது நடக்கும்.