சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சியினர் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரையின்போது வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.




சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தேர்தல் பரப்புரையின்போது அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு பெண்கள் ஆரத்தி எடுத்துள்ளனர். அப்போது, அவர் அந்த பெண்களுக்கு பணம் அளித்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறி, ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறி அமைச்சர் சி.வி.சண்முகம் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விழுப்புரத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.