கர்நாடக தேர்தலில் அதிமுக இபிஎஸ் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குங்கள் என கர்நாடக தேர்தல் அலுவலருக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. மேலும் அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் அண்ணா பூங்கா பகுதியில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, அதிமுகவின் இறுதிவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து பிறகும் கூட குழப்பம் நீடித்து வந்ததாக கூறி வந்தார்கள். இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்வு, இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவைகளை பதிவிறக்கம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒற்றைத் தலைமையான அதிமுக இயக்கம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எல்லாம் பிரச்சனைகளும் தீர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றிகரமாக எழுச்சி உடன் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து அனைத்து குழப்பமும் தற்பொழுது தெரிந்து விட்டது.
இதுவரை தடையாகவும், முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்த நபர்கள், அதிமுகவின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது முட்டாள்தனம் என்று புரிந்து அமைதி காக்க வேண்டும், அதிமுகவிற்கு இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்துவிட்டது. தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துவிட்டது எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவிற்கு பொதுச் செயலாளர் என்றார். அதிமுகவும் இரட்டைஇலைச் சின்னமும், எடப்பாடி பழனிச்சாமி கையில் உள்ளது. அதிமுக பல எழுச்சியுடன் எல்லாம் தேர்தலையும் சந்தித்து வெற்றி வாகைசூடி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கான தேர்தலாக அமையும். ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் அதிருப்தியாளர்கள், என்ன காரணத்திற்காக பிரிந்து சென்றார்கள் என்பது குறித்து அவர்களுக்கு தான் தெரியும். கட்சியின் தலைமை மீது அதிருப்தி இருந்ததாக தெரியவில்லை, உள்ளூர் பிரச்சனை காரணமாக அதிருப்தி உடன் இருந்திருக்கலாம், யாரை யாரையெல்லாம் கட்சியிலிருந்து இணைத்துக்கொள்வது என்பது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார். இனிமேல் அதிமுகவில் எந்த பிளவும் பிரச்சனையும் இருக்காது.
அதிமுக இயக்கத்திற்கும், சின்னத்திற்கும் உரிமை கொண்டாடியவர்கள் இனிமேல் அதை பயன்படுத்தக் கூடாது சட்டப்படி குற்றம்.எனவே கட்சியும், சின்னமும் எடப்பாடி பழனிச்சாமிடம் பத்திரமாக வழங்கப்பட்டு விட்டது. அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் குழப்பம் விளைவிக்கும் வகையில் பயன்படுத்தினால் சட்டப்படி தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும். இனிமேலாவது முட்டாள்தனத்தை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்றார். இதனிடையே அதிமுக தொண்டர்கள் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கர்நாடக தேர்தலில் அதிமுக வெற்றியை பெறுவோம் இனி அதிமுக தலைமை சிறப்பாக செயல்படும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அடுத்து தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவோம் என்றும் கூறினார்.