அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரான ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபிக் அமர்வின் முன்பு விசாரணை தொடங்கியது.


ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குருகிருஷ்ணகுமார், பி.எஸ். ராமன், மணிசங்கர், ஸ்ரீ ராம், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜர் ஆகியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், விஜயநாராயண் ஆகியோர் ஆஜர் ஆகியுள்ளனர்.


அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக மேல்முறையீடு:


அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என கூறி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.


கடந்த ஜூலை 11, 2022 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு தனி நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒபிஎஸ் தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும், தீர்மானங்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவையடுத்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதியின் தீர்ப்பையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்.


இந்த வழக்கில் வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு பி.எஸ் ராமன், “ஓ பன்னீர்செல்வத்தை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டும் எப்படி சரியாகும்” என கேள்வி எழுப்பினார். இந்த வாதத்தை முன்வைத்த பின்  நீதிபதிகள் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கபட்டுவிட்டதா என கேள்வி எழுப்பினார்கள்.





மூத்த வழக்கறிஞர் அப்துல்சலீம் வாதிடுகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என கூறினார். மேலும் உச்சநீதிமன்றம் உத்தரவு தெளிவாக உள்ளது, எங்களை வாக்களிக்க அனுமதித்துள்ளது என மனோஜ்பாண்டியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஈபிஎஸ் தரப்பில் ”தற்போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை. பொது செயலாளர் பதவி மட்டுமே உள்ளது. கட்சியில் 95% ஈ.பி.எஸ் தலைமை ஏற்றுள்ளனர். கட்சி விதிகளின் படி தேர்தல் நடத்தபட்டு பொதுச் செயலாளராக தேர்வாகி உள்ளார்” என வாதிடப்பட்டது.


மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 3ஆம் தேதி மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி  பொதுச்செயலாளராக செயல்பட தடைவிதிக்கக்கோரி இடைக்கால  உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அப்படி உத்தரவு பிறப்பித்தால் அது சிக்கலை ஏற்படுத்தி விடும் என தெரிவித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று தொடங்கியுள்ளது.