மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் வழியில் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கூறிய அவர்,இந்த பகுதி எப்போதுமே தேசியத்தை நம்புகிற பகுதி. பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவதற்காக இளைஞர்கள், பெண்கள் அதிகமாக பாஜகவில் இணைந்து வருகின்றனர். ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும் ஒரு மாற்றத்தை பார்த்து வருகிறேன்.




மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலை தெளிவாக உள்ளது. அந்த துறையின் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நாடாளுமன்றத்திலும் சரி, வெளியே பத்திரிக்கையாளர்களிடமும் சரி மேகதாது அணையை கட்ட முடியாது என தெளிவாக கூறியிருக்கிறார்.கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மேகதாது அணை பிரச்சினையை கையில் எடுத்து பாதயாத்திரை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி இதனை தொடர்ந்து அரசியலாக்கி வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது பற்றி இதுவரை வாயே திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.


மேலும், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக கர்நாடக காங்கிரஸ் கட்சியின் போக்கை இதுவரை கண்டிக்கக்கூட இல்லை. இது தொடர்பாக ஒருவார்த்தை கூட பேசாத முதல்வராக தமிழக முதல்வர் மாறியிருக்கிறார்.பாஜகவை பொறுத்தவரை இந்த பிரச்சினையை வலியுறுத்தி தஞ்சாவூரில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தோம். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். காவிரி நதிநீரை பங்கிடும் மாநிலங்களின் அனுமதியில்லாமல் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என மத்திய அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் ரகசிய உறவு இருக்கிறதா, அதை திமுக ஆமோதிக்கிறதா என்பதை கேட்க வேண்டும். 




பிரதமர் மோடி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் கொடுக்காத திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்துள்ளார். தமிழக அரசுக்கு தொலைநோக்கு திட்டம் கிடையாது. எதுவமே இல்லாமல் அவா்கள் கடைசியாக நம்பியிருப்பது டாஸ்மாக்கை தான். மதுபானங்களின் விலையை உயர்த்தினால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும், அதனால் தலை தப்பிவிடும் என கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அரசை நடத்திவிடலாம் என நம்பிக் கொண்டிருக்கின்றனர்.இது தான் திராவிட மாடல் வளர்ச்சியா? தமிழக முதல்வர் பொய்யை மட்டுமே கூறிக் கொண்டு ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறார். முந்தைய அதிமுக அரசு கொண்டுவந்த பல திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார்கள். மத்திய அரசு நிதியில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு தங்களது பெயரை ஒட்டிவிட்டு மத்திய அரசையே மீண்டும் குறை சொல்வதை எப்படி ஏற்க முடியும். 




மற்ற கட்சியின் (அதிமுகவின்) உள்கட்சி விவகாரம் குறித்து பேசுவது மரபல்ல. அதனை பாஜக ஒருபோதும் செய்யாது. எங்களுக்கு கட்சி பணி நிறைய இருக்கிறது. அதில் கவனம் செலுத்தி வருகிறோம். இதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளது. அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தங்கள் கட்சி விவகாரம் தொடர்பாக அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்.


கோகுல்ராஜ் கொலை வழக்கில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். விருப்பமில்லாதவர்கள் சட்ட அடிப்படையில் மேல்முறையீடு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.