வைரல் வீடியோ ஒன்றின்மூலம் தமிழ்நாட்டில் பிரபலமான இளம்பெண் அவர். புதிதாய்த் தொடங்கப்பட்ட கட்சி ஒன்றில் இணைந்த அவருக்குப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவும் அக்கட்சி வாய்ப்பளித்தது.
அந்தப் பெண் தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுத்த பேட்டிகளை வைத்து அவரின் அறிவுப் புரிதல் குறித்து கடுமையான கேலியும் கிண்டலும் செய்யப்பட்டது. இந்தச் சமூகம் அத்துடன் நிறுத்தி இருந்தால் கூடப் பரவாயில்லை.
அந்தப் பெண்ணின் அழகு, அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு குறித்து இழிவாகப் பேசியது. “அடடா, எனக்கு அந்த தொகுதில வாக்கு இல்லாம போயிடுச்சே?” என்று பிற தொகுதி ஆண்கள் பாசாங்காய் வருந்தினர். அதே தொகுதி ஆண்கள், “எங்க தொகுதிதான்... பிரச்சாரத்துக்கு அவ வர்ற அன்னிக்கு, லீவு போட்டு பார்க்கணும்” என்று இணையத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆண்மைய சமூகத்தில், குறிப்பாக அரசியலில் நடைபெறும் அதிகாரத்துக்கான போட்டியில் வெற்றி பெற ஓர் ஆண் போராடுவதைக் காட்டிலும் போட்டியில் இடம்பெறுவதற்கே ஒரு பெண் அதிகமாகப் போராட வேண்டியிருக்கிறது.
எப்படிக் கிடைத்தது?
பொதுவாக ஒரு பெண் தன் திறமையாலும் உழைப்பாலும் பெறக்கூடிய இடத்தை, அவள் பெண் என்பதாலேயே கிடைத்தது என்று எளிதாய்ச் சொல்லிவிடுகிறோம்.
உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இந்தக் கொண்டாட்டங்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் ஏராளமான பெண்கள் கழனியிலும் காட்டிலும் மேட்டிலும் கடைகளிலும் ஏன் வீட்டிலும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் அரசியலில் பெண்கள் பங்கேற்பு என்பது, ஒரு குடம் நீரில் ஒரு துளி என்ற அளவிலேயே இருக்கிறது.
இந்திய விடுதலைப் போராட்டம் என்னும் அரசியலில் பங்கேற்ற பெண்களின் பங்கு அளப்பரியது. ஆனால் ஆண்களால் எழுதப்பட்ட சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆண்களைப் பற்றித்தான் அதிகம் படித்திருக்கிறோம்.
பெண் விடுதலை வீராங்கனைகள்
அரசியல் வரலாற்றில் காந்தி, நேரு, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மோடி குறித்து நாம் அறிந்திருப்பவை ஏராளம். ஆனால், இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட சில விதிவிலக்குகள் தவிர்த்து, சுதந்திரத்துக்கான அஹிம்சை வேள்வியில் கணவருக்கு பக்க பலமாக இருந்த கஸ்தூரி பாய், ஆயுதம் தரித்துப் போரிட்ட கல்பனா தத்தா (கல்பனா ஜோஷி), அருந்ததியர் இனத்தில் இருந்து பஞ்சாயத்துத் தலைவியாகி அதிகாரத்தைக் கேள்வி கேட்டதால் காதும் கைவிரல்களும் வெட்டப்பட்ட தாழையூத்து கிருஷ்ணவேணி, ஏழை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைத்ததால் தீர்த்துக் கட்டப்பட்ட வில்லாபுரம் லீலாவதி ஆகியோரின் பெயர்களையாவது நாம் தெரிந்திருக்கிறோமா?
அண்மையில் சென்னை மேயர் பிரியா ராஜன் பேசியிருந்த காணொலிகள் பல வைரலாகி இருந்தன. குறிப்பாக அதிகம் பகிரப்பட்ட அந்த 29 விநாடிக் காணொலியில், அவர் 29 ஆண்டுகாலம் வாழ்ந்த வாழ்க்கை எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? அவர் பெண் என்பதாலா?
எது சரி என்று யார் முடிவெடுக்க வேண்டும்?
2022ஆம் ஆண்டிலும் பெண்களுக்கு எது சரி, எது தேவை என்பதை ஆண் ஆட்சியாளர்களே முடிவு செய்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீட்டுக்கே 1996-ல் இருந்து இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். அதனால்தானோ என்னவோ மகப்பேறு பற்றியும், கருக்கலைப்பு குறித்தும் ஆண்கள்தான் முடிவெடுக்கிறார்கள். நீதிமன்றத்திலும் இதே நிலைதான். அத்தியாவசியத் தேவையான நாப்கின்கள் மீது அதீத வரி விதிக்கப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணம் பெண்களின் போதிய பிரதிநிதித்துவம் இன்மை. மக்களவையில் 542 உறுப்பினர்களில் 81 பேர் மட்டுமே பெண்கள். மாநிலங்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களான 237 பேரில், 29 பேர் மட்டுமே பெண்கள். அதாவது மக்களவையில் 15 சதவீதமாகவும் மாநிலங்களவையில் 12.2 சதவீதமாகவும் பெண்களின் எண்ணிக்கை உள்ளது.
நாடாளுமன்றங்களில் பெண்கள் என்ற அளவுகோல் அடிப்படையிலான உலகளாவிய தரவரிசையில் மொத்தமுள்ள 192 நாடுகளில் இந்தியா 148 ஆவது இடத்தில் உள்ளதை இந்தத் தருணத்தில் நினைவில் நிறுத்த வேண்டும். முதல் நாடாக உள்ள ருவாண்டாவில் 61.3% பெண்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். 2ஆவதாக உள்ள கியூபாவில் 53.2 சதவீதமும் பொலிவியாவில் 53.1 சதவீதமும் பெண்கள் நாடாளும் அவையில் அங்கம் வகிக்கின்றனர்.
அரசியல் குடும்பங்களிலும் பெண்களுக்கு இரண்டாம் இடம்
அரிதிலும் அரிதான சிலரைத் தவிர, அரசியலில் இருக்கும் பெண் தலைவர்கள் ஆண் தலைவரின் மனைவியாகவோ, மகளாகவோ, மருமகளாகவோதான் இருக்கின்றனர். வாரிசு அரசியல் செய்யும் குடும்பங்களிலும் கூட பெண் வாரிசுகளுக்குக் கூடுதல் திறமையும் தகுதியும் இருந்தாலும் ஆண்களுக்குத்தான் முதல் இடம் கொடுக்கப்படுகிறது.
இந்தியாவில் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேருவின் மகள். நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மனைவி. அவருக்குப் பிறகு முதலில் ராகுல் காந்திதான் காங்கிரஸின் முகமாக அறியப்பட்டார். இரண்டாவதாகவே பிரியங்கா காந்தி அரசியலுக்குள் நுழைந்தார்.
சற்றே விதிவிலக்காக இருந்தாலும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆருடன் திரைப்படங்களில் இணைந்து நடித்தவர். அதிமுகவில் எம்ஜிஆரால் வளர்த்துவிடப்பட்டவர். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியும் தலித் மக்களுக்கான தலைவராக அறியப்பட்ட கன்ஷிராமின் வழிவந்தவர். மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே தன்னியல்பாக காங்கிரஸில் இருந்து வெளியே வந்து திரிணாமூல் காங்கிரஸைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் காங்கிரஸ்காரரின் மகள். பாஜகவில் இணைந்து மாநிலத் தலைவராகி, தற்போது இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். ஆளுநராவதற்கு முன்பு ஒரு பெண்ணாக அவர் பட்ட அவமானங்கள், எதிர்கொண்ட கேலிகள் கொஞ்சநஞ்சமல்ல. பெண்ணாக இருந்ததாலேயே உயரம், நிறம், தலைமுடி ஆகியவற்றுக்காக அவர், சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டார்.
இரண்டாம்கட்டத் தலைவர்கள்
தமிழ்நாட்டு எம்.பி. கனிமொழி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள். மற்றொரு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் தந்தையும் சகோதரரும் அரசியல் பின்னணி கொண்டவர்கள். 2ஆவது, 3ஆவது கட்டத்தில் இருந்தாலும், ஆண்களால் படிப்படியாக வளர்ந்து கட்சிக்குள் முக்கியப் பொறுப்புக்கு வர முடிகிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது சாத்தியமாவதில்லை.
திருமணமும் குடும்பப் பொறுப்புகளும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தைக் குறைக்கின்றன. அதேபோல கொலை, கொள்ளை எனக் குற்றப் பின்னணி நிறைந்த துறையாகவும் அரசியல் களம் பார்க்கப்படுகிறது. பெண்களை மோசமாக இழிவுபடுத்தலுக்கு அரசியல் துறை மிகச்சிறந்த முன்னுதாரணமாக உள்ளது.
இவற்றாலும் பொருளாதாரக் காரணங்களாலும், பெண்களின் பங்கேற்பு அரசியலில் குறைவாகவே உள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பங்கேற்ற சுமார் 50,000 வேட்பாளர்களில் வெறும் 9% மட்டுமே பெண்கள். இந்தத் தகவலை ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்திருந்தது.
அதிகார எல்லையை விரிப்பதில்லை
இட ஒதுக்கீட்டின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் உண்மையான அதிகாரக் கயிறு கணவர்களிடமோ, தந்தைகளிடமோதான் இருக்கிறது. அந்தக் கயிற்றைத் தாண்டி பெண்களால் வெளியே வரமுடிவதில்லை. அப்படி வருபவர்களும் சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று தங்களின் அரசியல், அதிகார எல்லையை விரிப்பதில்லை.
பெண்களுக்கான உரிமைகளும் திட்டங்களும் பாதுகாப்பும் கிடைக்க, அதிகார மையத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியம். ஆண் மைய சிந்தனைகளால் பெண்களுக்கான தேவையை முழுமையான உணர முடியாது. அதிகார வெளியில் பெண்களின் பங்கு அதிகரிக்க, முதலில் இல்லங்களில் அரசியல் பேச்சுகள் தொடங்கப்பட வேண்டும், கல்வி நிலையங்களில் அரசியல் விவாதங்கள் எழுப்பப்பட வேண்டும். கட்சிகள் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவற்றின்மூலமே பெண் அரசியல் தலைவர்கள் அதிக அளவில் உருவாக முடியும். சக பெண்களுக்கான தேவைகளைப் புரிந்து, உணர்ந்து... நிறைவேற்றவும் முடியும்.